“எங்கள் மீது திமுகவினர் பழி தூற்றுவதால் கவலையில்லை” – வைகோ ஆதங்கம்
‘ஒரு மாத கால தவெக ஆட்சியின் செயல்பாடுகள் அருமையாக உள்ளது. சமூக வலைதளங்களில் திமுகவை சேர்ந்தவர்கள் காரணம் இல்லாமல் எங்கள் மீது பழி தூற்றுவது குறித்து கவலைப்படவில்லை. இதற்கெல்லாம் நாங்கள் பழக்கப்பட்டவர்கள். நாங்கள் இதுபற்றி ஒரு வார்த்தை பேசவில்லை’ என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மேட்டமலையில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, “100 நாள் வேலைத் திட்டம் கும்மியடிக்கும் திட்டம் போல, ஒரு மரத்தடியில் உட்கார்ந்து, கையெழுத்து போட்டுவிட்டு சென்று விடுகிறார்கள் என மக்கள் பேசுகிறார்கள். எனவே 100 வேலைத் திட்ட பணியாளர்களை சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபடுத்த வேண்டும். சீமைக்கருவேல மரம் நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் விவசாயத்தை அழித்துவிட்டது. எனவெ, வெளிநாடுகளில் இதனை பிசாசு செடி என்கின்றனர்.
மேகேதாட்டு விவகாரத்தில் வில்லன் மத்திய அரசு. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக மேகேதாட்டு விவகாரத்தில் தமிழகத்துக்கு வஞ்சகம் செய்கிறது மத்திய அரசு. இப்போது கர்நாடகாவில் இருக்கும் முதல்வர் வெறி பிடித்தவர்.
திருவள்ளுவருக்கு ஆளுநர் காவித் துண்டு போடுகிறார் என அவரை நான் கடுமையாக கண்டித்தேன். ஆனால், நான் இந்துக்களை கண்டிக்கிறேன் என மதிமுக அலுவலகத்தை முற்றுகையிடுவதாக இந்து முன்னணி சொல்லியுள்ளனர். ஒரு கட்சியை அலுவலகத்தை ஏன் முற்றுகையிடுகிறீர்கள்?
உள்ளாட்சி தேர்தல் கூட்டணி பற்றி இன்னும் யோசிக்கவில்லை. பொதுக்குழுவை கூட்டி தற்போதைய நிலவரங்கள் குறித்து விவாதித்து முடிவெடுப்போம். திமுகவுக்கு விசுவாசமாக உழைத்து தேர்தல் பணியாற்றினோம். மற்ற கூட்டணி கட்சிகள் முடிவெடுத்து, ஆளும் கட்சியுடன் சேர்ந்துள்ளனர். நாங்கள் இதில் எந்த முடிவும் எடுக்கவில்லை.
சமூக வலைதளங்களில் திமுகவை சேர்ந்தவர்கள் காரணம் இல்லாமல் எங்கள் மீது பழி தூற்றுவது குறித்து கவலைப்படவில்லை. இதற்கெல்லாம் நாங்கள் பழக்கப்பட்டவர்கள். நாங்கள் இதுபற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. நாங்கள் அவசரப்படவில்லை. ஜூன் 27 பொதுக்குழு கூடி முடிவை அறிவிப்போம்” என்றார்
