‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானார்
தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராகக் கோலோச்சிவந்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானார். அவருக்கு வயது 84.
முதுமையாலும் கடுமையான நுரையீரல் தொற்றாலும் திரு பாரதிராஜா கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதிலிருந்து மீண்டு வந்த அவரை மருத்துவர்கள் வீட்டிலேயே ஓய்வு எடுக்கும்படி தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை (ஜூன் 10) காலை இவரது உயிர் பிரிந்தது.
கடந்த 1977ஆம் ஆண்டு வெளியான ‘16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் திரு பாரதிராஜா.
வித்தியாசமான கதைக்களங்கள், காட்சிகளைப் படமாக்கும் பாணி, எதிர்பாராத திரைக்கதைத் திருப்பங்கள் என தமது வித்தியாசமான படைப்புகளின்மூலம் தமிழ்ச் சினிமாவின் புதிய இலக்கணத்தை எழுதினார் திரு பாரதிராஜா.
இது குறித்த செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், “சங்கத்தின் முன்னாள் தலைவரும், மூத்த உறுப்பினர்களில் ஒருவருமான இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று அதிகாலை காலமாகிவிட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்” என அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சியினர் , திரைத்துரையினர் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை நீலாங்கரையில் முதலமைச்சர் விஜய் வீட்டுக்கு அருகில் இயக்குநர் பாரதிராஜா வீடு உள்ளது. இன்று அதிகாலை பாரதிராஜா மறைந்ததை தொடர்ந்து முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
இதனையடுத்து முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் தளபதிவு ஒன்றில்,”திரைத்துறையில் திரு. பாரதிராஜா அவர்களின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்.” என முதலமைச்சர் அறிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் “தனது படைப்புகளுக்காக நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு தேசிய, மாநில விருதுகளைப் பெற்றவர். பல தலைமுறைக் கலைஞர்களை உருவாக்கிய அவரது பங்களிப்பு தமிழ்த் திரைப்பட வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.” எனவும் முதலமைச்சர் விஜயின் இரங்கல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரைமொழியில் தனிமொழி பேசி தனிச் சகாப்தத்தையே உருவாக்கியவர் பாரதிராஜா என திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்த்திரையுலகுக்கு பேரிழப்பாகிவிட்ட பெருங்கலைஞனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் உரிமைகள் தொடர்பான போராட்டங்களில் திரையுலகை ஈடுபடுத்தியதில் அவருக்கு மிகப்பெரிய பங்களிப்பு உண்டு. சினிமா ரசிகர்களின் மனங்களில், தமிழ் மக்களின் மனங்களில் என்றும் அவர் வாழ்வார் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாரதி ராஜாவின் வீட்டிற்கு நேரில் சென்று ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
