பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் தமது விடைத் தாள்களைப் பார்வையிட உரிமை உண்டு: மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பரீட்சைகளுக்குத் தோற்றும் மாணவர்கள் தமது விடைத்தாள்கள் மற்றும் புள்ளி விபரங்களைச் சட்டபூர்வமாகப் பெற்றுக்கொள்ள உரிமையுடையவர்கள் என மேன்முறையீட்டு நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.
பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் விடைத்தாள்களை வழங்க மறுத்து, இலங்கை திறந்த பல்கலைக்கழகம் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை நிராகரித்தே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டத்துறைப் பரீட்சையில் தோற்றிய தனது மகளின் விடைத்தாள்கள் மற்றும் புள்ளிகளை வழங்குமாறு, ஆர்.ஏ.ஜனக ரோஷான் ரணசிங்க என்பவர் விடுத்த கோரிக்கையை பல்கலைக்கழக நிர்வாகம் நிராகரித்திருந்தது.
பொதுப் பரீட்சை நடைமுறைகளின் இரகசியத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை இதனால் பாதிக்கப்படும் எனக் கூறியே இந்தத் தகவல் பல்கலைக்கழகத்தினால் மறுக்கப்பட்டது.
எனினும், பாதிக்கப்பட்ட தரப்பினர் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவை நாடியபோது, விடைத்தாள்களை வழங்குமாறு ஆணைக்குழு உத்தரவிட்டது. இதனை எதிர்த்தே திறந்த பல்கலைக்கழக நிர்வாகம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.
இந்த மனுவை விரிவாக விசாரித்த நீதிமன்றம், அனைத்து வகையான பொதுப் பரீட்சைகளின் போதும் கல்வி நிறுவனங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு உட்பட வேண்டும் எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
அத்துடன், மதிப்பீடு செய்தவர்களின் அடையாளங்களை இரகசியமாகப் பேணிப் பாதுகாப்பது, மாணவர்களின் விடைத்தாள்களைப் பாதுகாப்பது மற்றும் பெறுபேறுகளின் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றுக்கு இடையிலான முரண்பாடுகள் எழும்போது, அதற்குத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான மொஹமட் லஃபார் மற்றும் பீ.குமாரரத்தினம் ஆகியோரடங்கிய நீதிபதிகள் குழாம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
இத்தீர்ப்பானது, நாட்டின் கல்வித் துறையில் மற்றும் பரீட்சை முறைகளில் வெளிப்படைத்தன்மையையும், மாணவர்களுக்கான பொறுப்புக்கூறலையும் சட்டரீதியாக உறுதிப்படுத்துவதில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
