Main Menu

இலங்கையில் சிங்களவர்-களிடையே தமிழ் மொழி அறிவும், தமிழர்களி-டையே சிங்கள மொழி அறிவும் அதிகரிப்பு

இலங்கையில் மலையகத் தமிழரிடையே சிங்கள மொழியறிவு அதிகரித்துள்ள அதேவேளை சிங்களவரிடையேயும் தமிழ் மொழி அறிவு குறிப்பிடத்தக்க அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தொகைமதிப்பு மற்றம் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் மக்கள்தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்புத் தரவுகளின் அடிப்படையில், இலங்கையின் மொழி அறிவு மற்றும் எழுத்தறிவு நிலை குறித்த தகவல்களிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 10 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில், சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் ஏதேனும் ஒன்றில் வாசிக்கவும் எழுதவும் தெரிந்தவர்கள் எழுத்தறிவு உள்ளவர்களாகக் கருதப்படுகின்றனர்.

1881 ஆம் ஆண்டு வெறும் 17.4 வீதமாக இருந்த ஒட்டுமொத்த எழுத்தறிவு விகிதம், 2024 ஆம் ஆண்டில் 97.4 வீதமாக உயர்ந்து ஒரு வரலாற்றுச் சாதனையைக் எட்டியுள்ளது.

ஆரம்பக் காலங்களில் ஆண்களுக்கும் (29.8 வீதம்) பெண்களுக்குமான (3.1 வீதம்) எழுத்தறிவு இடைவெளி அதிகமாக இருந்த போதிலும், 2024 இல் ஆண்கள் 97.9 வீதம் மற்றும் பெண்கள் 97.0 வீதம் எனப் பாலின சமநிலையை நோக்கி முன்னேறியுள்ளனர்.

குடியிருப்புத் துறைகளின் அடிப்படையில் பார்க்கும்போது, நகர்ப்புறங்களில் மிக அதிகப்படியான எழுத்தறிவு (98.4 வீதம்) காணப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கிராமப்புறங்களில் 97.6 வீதமாகவும், தோட்டப்புறங்களில் 91.2 வீதமாகவும் எழுத்தறிவு விகிதம் பதிவாகியுள்ளது.

வயதுப் பிரிவுகளின் அடிப்படையில் ஆராயும்போது, இளைய தலைமுறையினரிடையே பன்மொழித் திறன் அதிகரித்து வருவது தெளிவாகிறது.

குறிப்பாக 15-19 வயதுப் பிரிவினரிடையே சிங்கள மொழி அறிவு 87.2 வீதமாகவும், ஆங்கில அறிவு 79.1 வீதமாகவும், தமிழ் மொழி அறிவு 62.7 வீதமாகவும் உள்ளது.

வயது அதிகரிக்க அதிகரிக்க தமிழ் மற்றும் ஆங்கில மொழித் தேர்ச்சி விகிதம் குறைந்து செல்வதைக் காணமுடிகிறது. 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் தமிழ் மொழி அறிவு 30.8 வீதமாகவும், ஆங்கில அறிவு 35.0 வீதமாகவும் மாத்திரமே உள்ளது.

தேசிய மட்டத்தில் சிங்கள மொழி எழுத்தறிவு 85.2 வீதமாகவும், ஆங்கில அறிவு 57.3 வீதமாகவும், தமிழ் அறிவு 45.3 வீதமாகவும் உள்ளது.

மாவட்ட ரீதியாகப் பார்க்கும்போது, அதிக எழுத்தறிவு கொண்ட மாவட்டங்களில் கம்பஹா (98.9மூ), கொழும்பு (98.6 வீதம்), களுத்துறை (98.5 வீதம்) மற்றும் யாழ்ப்பாணம் (98.3 வீதம்) ஆகிய மாவட்டங்கள் முன்னிலையில் உள்ளன.

குறைந்த எழுத்தறிவு கொண்ட மாவட்டங்களில் மட்டக்களப்பு மாவட்டம் 92.7 வீதம் என்ற குறைந்த எழுத்தறிவு விகிதத்தைப் பதிவு செய்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் மிக அதிகப்படியாக 74.2 வீதம் பேர் ஆங்கில அறிவு பெற்றுள்ளனர், அதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் இது மிகக் குறைவாக 31.7 வீதமாக உள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் தமிழ் மொழி அறிவு தலா 97.9 வீதமாக உச்சத்தில் உள்ளது.

2012 மற்றும் 2024 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் அனைத்து இனத்தவர்களிடையேயும் பன்மொழித் திறன் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது.

சிங்களவர்களிடையே சிங்கள மொழி அறிவு 97.8 வீதமாகவும், ஆங்கில அறிவு 58.6 வீதமாகவும் உள்ளது. 2012 இல் 5.3 வீதமாக இருந்த இவர்களின் தமிழ் மொழி அறிவு 2024 இல் 29.2 வீதமாக உயர்ந்துள்ளது.

இலங்கைத் தமிழர்களிடையே தமிழ் மொழி அறிவு 94.0 வீதமாகவும், மலையகத் தமிழர்களிடையே 90.0 வீதமாகவும் உள்ளது. குறிப்பாக இவர்களிடையே சிங்கள மொழி அறிவு முறையே 36.3 வீதம் மற்றும் 40.8 வீதமாக அதிகரித்துள்ளது.

இலங்கைச் சோனகரிடையே தமிழ் மொழி அறிவு 94.5 வீதமாகவும், சிங்கள மொழி அறிவு 62.5 வீதமாகவும், ஆங்கில அறிவு 65.4 வீதமாகவும் காணப்படுகிறது.

பரங்கியர் சமூகத்தினர் 79.3 வீதம் என்ற மிக உயர்ந்த ஆங்கில மொழி எழுத்தறிவைக் கொண்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக, இலங்கையில் எழுத்தறிவு விகிதம் உயர்ந்துள்ளதுடன், இரண்டாம் மொழி கற்றலில் (சிங்களவர்கள் தமிழ் கற்பதும், தமிழர்கள் சிங்களம் கற்பதும்) ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் ஆங்கில மொழியின் பரவலான வளர்ச்சி ஆகியவை எதிர்காலத் தலைமுறையினரிடையே சிறந்த தொடர்பாடல் பாலத்தை உருவாக்கும் என்பதை இத்தரவுகள் வெளிப்படுத்துகின்றன.