Main Menu

ஜனாதிபதியை சந்திக்கவுள்ள ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர்

இலங்கைக்கு வருகை தந்துள்ள ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர் Roman Marshavin மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (26) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான வலுசக்தி துறையின் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

 

மேலும், இலங்கை மற்றும் ரஷ்ய கூட்டமைப்பிற்கு இடையிலான நீண்டகால ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தல், குறிப்பாக எரிபொருள் விநியோகம், வலுசக்தி பாதுகாப்பு மற்றும் நீண்டகாலப் பங்காளித்துவத்துக்கான புதிய வாய்ப்புகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்நாட்டிற்கு வருகை தந்துள்ள ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சரை, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் Levan S. Dzhagaryan, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிற்கான மேலதிக செயலாளர் எம்.ஆர்.கே. லெனகல மற்றும் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிற்கான பணிப்பாளர் நாயகம் சுகீஸ்வர குணரத்ன ஆகியோர் இன்று (26) முற்பகல் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றனர்.

உலகளாவிய சந்தை நிலைமைகள் மாறிவரும் பின்னணியில், இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை, குறிப்பாக வலுசக்தி துறையிலான உறவுகளை மேலும் மேம்படுத்த இரு நாடுகளும் எடுத்து வரும் முயற்சியை இந்த விஜயம் பிரதிபலிக்கிறது.