“நான் ஆசியாவின் பக்கம்” – மேற்காசிய போர் குறித்து கமல்ஹாசன் கருத்து
அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைதளப் பதிவில் அவர் பதிவிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:
“செம்மஞ்சள் பிழம்பு. எண்ணெய்க் கிடங்குகள் வெடித்து ஆரஞ்சு அக்னி மேகமாய்க் கொப்பளிக்கும் யூடியூப் வீடியோ பார்த்து ‘அடேங்கப்பா! போட்டாம் பாரு’ என்று, யாரோ கிரிக்கெட்டில் சிக்ஸர் அடித்தது போல் ஆர்ப்பரிப்பவரிடம், நீங்கள் எந்தக் கட்சி அமெரிக்காவா, ஈரானா? என்ற கேள்விக்கு, ‘நான் இந்தியன், நான் பார்வையாளன்’ என விம்முகிறார்.
முகலாய முஸ்லீமை, மன்னர்களை, 500 ஆண்டுகள் ஏற்றுக்கொண்ட பெரும்பான்மையைச் சேர்ந்த இவர்கள் நிச்சயமாக சத்ரபதி சிவாஜியின் நேரடி வாரிசுகளல்லர்; நாளை இந்திய எண்ணெய்க் கிடங்கிற்கு வரப்போகும் ஆபத்து புரியாதவர்கள். அவர் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் மதம், என்னை வியப்பில் ஆழ்த்தவில்லை. அவர் அறியாமையை வியப்பதோடு, அது என்னைப் பதற்றத்திற்கும் உள்ளாக்குகிறது.
நம் ராணுவ வீரர்கள் பலர் வீண் போரில் மடிந்த பின் ‘சாரே ஜஹான்ஸே’ பாட, மலர் வளையத்துடன் மனித நேயர்கள் என்ற விலாசத்துடன் தலைகாட்டுவார்கள். பாமரர்களும் பாதசாரிகளும் உழைப்பவர் வர்க்கமும், பெரும் கார்ப்பரேட் வியாபாரிகள் போல் எவன் எக்கேடு கெட்டால் என்ன என்று லாப நாமாவளி பாடிவிடக் கூடாது.
கிலாஃபத் இயக்கம் என்று பேசிய போது காந்தியாரைக் கிண்டலடித்தவர்களின் பேரப்பிள்ளைகள் இன்னமும் உயிரோடுதான் இருக்கிறார்கள். அவர்கள் நீடூழி வாழட்டும். கூடவே ஈரானும் ஊரானும் வாழட்டும்.
ஊடகத்தில் கிண்டல் மட்டும் அடிக்கும் அறியாமை, போருக்கோ நாட்டிற்கோ உதவாது. ‘போர் செல்லும் வீரன் ஒரு தாய் மகன்தான். நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவாள்’ (விஸ்வரூபம் படத்தில் நான் எழுதிய பாடல்) அது இந்தியத் தாயாக இருக்கவே கூடாது. நான் ஆசியாவின் பக்கம். வாழ்க இந்தியா” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 28-ம் தேதி அன்று ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தின. அதற்கு பதிலடி தரும் வகையில் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மேற்காசியாவில் போர் மூண்டு, கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
