Main Menu

யாழில் சீரற்ற வானிலையால் 86 குடும்பங்களைச் சேர்ந்த 297 பேர் பாதிப்பு ; 9 வீடுகள் பகுதியளவில் சேதம்

யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வாரகால மழையால் 86 குடும்பங்களைச் சேர்ந்த 297 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்காக ஓர் இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டுள்ளது என யாழ். மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.

இடர் பாதிப்புக்களைத் தணிப்பது மற்றும் எதிர்கொள்வது தொடர்பான அவசர முன்னாயத்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன்  தலைமையில்  திங்கட்கிழமை (24)  ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும்  தொடர்ந்து ஐந்து மாவட்டங்களினதும் தற்போதைய நிலவரம் ஆராயப்பட்டபோது,

முல்லைத்தீவு: சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. மரங்களை அகற்றுவதற்கு மரக் கூட்டுத்தாபனத்தின் ஒத்துழைப்பு போதாத நிலையில் உள்ளமை ஆளுநரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

கிளிநொச்சி: இரணைமடுக் குளம் அதன் கொள்ளளவில் நான்கில் ஒரு பகுதியையே கொண்டுள்ளதால் வெள்ள அபாயம் இல்லை எனவும், நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.

வவுனியா மற்றும் மன்னார்: தற்போதைய நிலையில் மிகப் பெரிய இடர்கள் இல்லை எனவும், அதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் இடையூறின்றி நடைபெற்று வருகின்றன. இடர் நிலைமை ஏற்பட்டால் பரீட்சைத் திணைக்களத்துடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். இதன்போது, பரீட்சை நிலையங்கள் இல்லாத பாடசாலைகளையும், பொது மண்டபங்களையும் இடம்பெயரும் மக்களுக்கான இடைத்தங்கல் முகாம்களாகப் பயன்படுத்துமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.

வடக்கு மாகாணத்தின் பராமரிப்பிலுள்ள 54 குளங்களில் 52 குளங்களின் நீர்மட்டம் 25 சதவீதத்துக்கும்; குறைவாகவே உள்ளது. 300 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்தால் மட்டுமே வான்பாயும் நிலை ஏற்படும் என மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் தெரிவித்தார். இதேநேரம் கடல் நீர்மட்டம் இன்னமும் உயர்வடையாமையர், யாழ். மாவட்டத்தின் 3 தடுப்பணைகளும் திறக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் தீவகப் பகுதிகளில் நோயாளர்களைக் கொண்டு செல்வதில் ஏற்பட்ட சவால்களைச் சுட்டிக்காட்டிய மாகாணச் சுகாதாரப் பணிப்பாளர், கடற்படை மற்றும் விமானப்படையின் உதவியுடன் அவசர மருத்துவச் சேவைகளை உறுதிப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கடல் நீர்மட்டம் உயர்வதற்கு முன்னதாகவே, உள்ளூராட்சி மன்றங்கள் வாய்க்கால்களைத் துப்புரவு செய்து, தேங்கியுள்ள வெள்ள நீரை விரைவாக வெளியேற்ற வேண்டும். அனர்த்த நடவடிக்கைகளுக்காக உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தேவையான நிதியை விடுவிக்குமாறு பிரதிப் பிரதம செயலாளர் (நிதி) அவர்களுக்குத முன்னாயத்த ஆளுநர் பணித்தார்.

மீட்புப் பணிகளுக்காக முப்படையினர் தயார் நிலையிலுள்ளதாகத் தெரிவித்தனர்.  இடர் காலத்தில் பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்டச் செயலகங்கள் 24 மணி நேரமும் மக்களுக்கு உதவும் வகையில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

பகிரவும்...