Main Menu

இந்திய முஸ்லிம்களின் மாபெரும் பங்களிப்பை மறந்து விட முடியாது – மு.கா.தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு

இந்திய முஸ்லிம்களின் மாபெரும் பங்களிப்பை நாங்கள் ஒருபோதும் மறந்து விட முடியாது  என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கொழும்பில் கடந்த 19 ஆம் திகதி அன்று நடைபெற்ற  அயலக ஆளுமைகளுக்கு அலங்காரம்  நிகழ்வில் வரவேற்புரையை ஆற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் குடியரசு தினத்தன்று சென்னையில்

வைத்து பேராசிரியர் பெருந்தகை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  பெருந்தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முனீருல் மில்லத்  காதர் முகிதீனுக்கு தகைசால் தமிழர்  என்கின்ற உயர் விருதை வழங்கிய சமயத்தில் அடியேனும் அந்நிகழ்வில் பங்குகொண்டு, அவருக்கு வாழ்த்துத் பத்திரம் வாசித்தளிக்ப்பட்ட போது , கூர்மையாக அதனை செவிமடுத்துக் கொண்டிருந்தேன்.

உண்மையிலேயே அயலகத்தில்  இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்கள், இந்தியாவில் 25 கோடி முஸ்லிம்கள் வாழுகின்ற ஒரு நாட்டில் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே இயங்கி வந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்கின்ற பேரியகத்தின் தலைவரை  இந்தியாவின் ஏனைய மாநிலங்களிலும் இருக்கின்ற எம்மவர்கள் எல்லாம் அவரை வைத்து கொண்டாடுகின்ற ஒரு நிலையில் தமிழகத்தின் முதலமைச்சர்  குறிப்பாக  திராவிட முறைமை   ஆட்சி என்கின்ற அதிசயத்தை நிகழ்த்தி கொண்டிருக்கின்ற முதல்வர் ,எம்மவர் ஒருவரை விருதுக்கு தெரிவு செய்திருக்கிறார் என்பதையிட்டு பெருமை படுகின்ற இலங்கையர்கள் அதை கொண்டாட வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்வை நாங்கள் ஏற்பாடு செய்தோம்.

உண்மையில் இந்திய முஸ்லிம்கள் என்றால் இந்த நாட்டில் எங்களுடைய சமூக மறுமலர்ச்சி, சமய நல்லிணக்கம், ஆன்மீகம் ஏன், எங்களது கல்வி முன்னேற்றம் இவற்றிலெல்லாம் முன்னோடிகளாக இங்கு வர்த்தகம் செய்ய வந்த இந்திய முஸ்லிம்களுடைய மாபெரும் பங்களிப்பை நாங்கள் மறந்து விட முடியாது; அதை யாரும் அழித்து விடவும் முடியாது.

அயலகத்தில் இருந்து இந்த உயர்பெரும் விருதுக்கு அன்னார் தெரிவு செய்யப்பட்டார் என்றவுடனேயே அவருக்கான இந்த நிகழ்வுடன் சேர்த்து இலங்கை வாழ் முஸ்லிம்கள் மாத்திரமல்ல, உலகில் தமிழ் பேசுகின்ற முஸ்லிம்கள் வாழ்கின்ற ஒவ்வொரு மூலை முடுக்கிலும் நன்றாக அறியப்பட்ட இசை முரசு ஈ.எம். ஹனீபாவுடைய பிறந்த நூற்றாண்டும் இந்த ஆண்டுதான் என்பதை தமிழக சட்டசபை உறுப்பினர் ஆளுர் ஷா நவாஸ்  அவருக்கான ஒரு பெருவிழா எடுக்க வேண்டும்  என்பதை நீண்ட அவாவுடன் வேண்டிகொண்டிருந்தார். அதனையும் சேர்த்து இந்நிகழ்வை இந்த இரண்டு முக்கிய ஆளுமைகளையும் நினைவு கூர்ந்து நாங்கள் இந்த நிகழ்வை நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

உண்மையில் பேராசிரியர் பெருந்தகை அவர்கள் 1980ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஒரு பின்னடைவை சந்தித்திருந்தாலும் ,24 ஆண்டுகளுக்கு பிறகு வேலூர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி இந்திய பாராளுமன்றத்தின் உறுப்பினராக இருந்த கால கட்டத்தில் ஒரு குறுகிய காலத்துக்குள்ளாக மிகப்பெரிய சாதனைகளை யெல்லாம் படைத்தவர்.

குறிப்பாக சர்காரியா கொமிஷன் போன்ற கொமிஷன்களை அமைத்து அன்றைய பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் இந்தியாவில் சிறுபான்மையாக வாழ்கின்ற முஸ்லிம்களின் பிரச்சினைகள் சம்பந்தமாக இந்திய அரசு அறிக்கையிடச் செய்த மாபெரிய பெருமைக்குரியவர் என்பதை  நாம் இங்கு நினைவுபடுத்தியாக வேண்டும்.

அதனோடு சேர்த்து மஹல்லா கொமிட்டி என்ற அடிப்படையில் பள்ளி வாசல்களையெல்லாம் ஒருங்கிணைத்து இந்திய முஸ்லிம்களின் அரசியல் பலத்தை  ஒன்று திரட்டுவதில் புதுமைகள் செய்தவர் பேராசிரியர் காதர் மொகிதீன் என்பதில் பெருமையடைகின்றோம்.  இது அவரைப் பற்றி நீண்ட உரையை ஆற்றுகின்ற சந்தர்ப்பம் அல்ல. வந்தவர்களை வரவேற்பதும் இந்த நிகழ்வின் நோக்கங்களை சுருக்கமாக   தெளிவு படுத்துவதும்தான் என்னுடைய உரையின் நோக்கமாகும்.  இசை முரசு ஈ.எம். ஹனீபாவின்  காந்தர்வ குரல் இந்த நாட்டு முஸ்லிம்களை மாத்திரமல்ல ,ஏனைய நாடுகளில் வசித்த தமிழ் பேசும் மக்களையும் வசீகரித்திருக்கின்றது.

எமது நாட்டில் நான்கைந்து தசாப்தங்களாக மீலாத் மேடைகளை ஆட்கொண்டிருந்த அவர், அதேவேளை சில திருமண நிகழ்வுகளிலும் இஸ்லாமிய கீதங்களை இசைத்ததாக எமது மூத்த முன்னாள் அமைச்சர் பௌசி  கூறினார். அவர்களது குடும்ப திருமண நிகழ்வுகளிலும் இசை முரசு வந்து பாடி மகிழ்வித்ததாகச் சொன்னார்.  அந்த கம்பீரமான குரலை இன்று நகலெடுத்து பாடுகின்றவர்கள் நிறையப் பேர் இருக்கின்றார்கள். அவர்களில் முக்கியமான இருவர் தமிழ் நாட்டிலிருந்து வருகை தந்து உங்களை மகிழ்விக்க இருக்கின்றார்கள்.

இசை முரசின் ஞாபகார்த்தமாக எங்களுடைய மண்ணைச் சேர்ந்த ம  முக்கிய பாடகர்கள் இருவரும் இசைமுரசின் அந்த காந்தர்வ குரலில்  உங்களை மகிழ்விக்க இருக்கின்றார்கள். இந்த நிகழ்வை ஒரு கொண்டாட்டமாக நாங்கள் நடத்துகின்ற போது , நான் அணிந்திருக்கின்ற இந்த சால்வை மூலம் எங்களின் பலஸ்தீன மக்களின் அவலங்களையும்  உலகறிய வேண்டும் என்பதற்காக இதனை நான் அணிந்திருக்கின்றேன். இந்த தருணத்தில் அவர்களுடைய அவலங்களுக்கு நிரந்தரமான தீர்வு வேண்டி எங்களது மண்ணிலும் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்த தருணத்தில், அக்கரைப்பற்றில் மிகப்பெரிய பேரணி ஒன்று நடந்து கொண்டிருக்கின்றது. பலஸ்தீனில் நடத்துகின்ற அந்த படுபாதக செயல்களுக்கு இஸ்ரேலிய சியோனிஸ அரசை கண்டித்து நடத்துகின்ற அந்த போராட்டத்தில் அதற்கு தலைமை தாங்குகின்ற அமைச்சர் அதாவுல்லாஹ் மற்றும் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அதில் கலந்து கொண்டிருக்கின்றனர் என்பதனையும் நான் சொல்லி வைக்க விரும்புகின்றேன்.

தொடர்ந்தேர்ச்சியாக எமது நாட்டில் ஏனைய அரசியல் கட்சிகளையும்,சமூக அமைப்புகளையும் இணைத்துக் கொண்டு பலஸ்தீன மக்களின் விடுதலைக்காக போராடுகின்ற – குரல் கொடுக்கின்ற ஒரு பேரியக்கம் உருவாகி தன்னுடைய பணியை  செவ்வனே செய்து கொண்டிருக்கின்றது.

எல்லாம் வல்ல இறைவன் சுந்திர பலஸ்தீன் மலர்வதற்கு அருள் புரிவானாக என்ற பிரார்த்தனைகளோடு வருகை தந்த உங்கள் அனைவரையும் அன்புடன்  வரவேற்று நிறைவு செய்கின்றேன்.

பகிரவும்...