Main Menu

ஈராக் நாடாளுமன்ற தேர்தல்: அல்-சதரின் சேரோன் இயக்கம் வெற்றி!

திட்டமிட்டதைவிட ஓராண்டுக்கு முன்னரே நடத்தப்பட்ட ஈராக், நாடாளுமன்ற தேர்தலில் சேரோன் இயக்கம் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொத்தமுள்ள 329 நாடாளுமன்ற இடங்களில் இஸ்லாமிய மதகுரு மூக்ததா அல்-சதரின் சேரோன் இயக்கம் 73 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சுன்னி இஸ்லாமிய பிரிவைச் சேர்ந்த முகமது அல்-கல்போசியின் ‘தக்கதூம்’ கூட்டணி இதுவரை 38 இடங்களில் வென்று இரண்டாம் இடத்தில் உள்ளது.

ஈரானுக்கு ஆதரவான பஃடா கூட்டணி வெறும் 14 இடங்கள் மட்டுமே வென்று பின்னடைவைச் சந்தித்துள்ளது.

அல்-சதர் தலைமையிலான கூட்டணி பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு ஆட்சியமைப்பதற்கு இன்னும் சில வார காலம் ஆகலாம். அவர் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதால் அல்-சதர் புதிய அரசாங்கத்துக்குத் தலைமை ஏற்க முடியாது.

இதனிடையே ஈராக்கில் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா மற்றும் ஈரானின் தலையீடு இருப்பதை நிறுத்த விரும்பும் அல்-சதர் வெளிநாட்டு தலையீடுகள் எதுவும் இல்லாத புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

2018ஆவது ஆண்டு நடந்த தேர்தலுடன் ஒப்பிடும் பொழுது அல்சத்ரின் கூட்டணி 19 இடங்கள் கூடுதலாக வெற்றி பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட முடிவுகள் தெரிவிக்கின்றன

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் வெறும் 41 சதவீத வாக்காளர்களே வாக்களித்தனர் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதப் பிரிவுகள் மற்றும் இன அடிப்படையிலான அதிகாரப் பகிர்வு என்பது உண்மையில் நடக்காது என்ற ஈராக்கியர்களின் நம்பிக்கையின்மையே பெரும்பாலானவர்கள் தேர்தலில் வாக்களிக்காமல் போனதற்கு காரணமாகப் பார்க்கப்படுகிறது.

பகிரவும்...