Main Menu

மக்களும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்- யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர்

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி மக்களும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டுமென மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அரசாங்க அதிபர் க.மகேசன் மேலும் கூறியுள்ளதாவதாவது, “ யாழில் புதிதாக 148 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய மாவட்டத்தில் தொற்றாளர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்து 166 ஆக  அதிகரித்துள்ளதுடன் கொரோனா மரணங்கள் 200ஆக உயர்ந்திருக்கின்றது.

குறித்த அதிகரிப்பின் பெரும் பகுதி மே மாதத்தின் பிற்பகுதியில் நடந்ததாகும். அத்துடன் தற்போது தினசரி தொற்றாளர்கள் எண்ணிக்கை சராசரியாக 130 வரை காணப்படுகின்றது. இது மோசமான அதிகரிப்பாகும்.

ஆகவே  மாவட்டத்திலுள்ள மக்கள், தங்களை முடக்கிக் கொண்டு அரசு அறிவித்துள்ள 10 நாட்களில் வீடுகளில் இருப்பது, எமது மாவட்டத்தையும் நாட்டையும் மோசமான நிலையிலிருந்து மீட்பதற்கு உதவியாக இருக்கும்.

எனவே மக்கள் இந்த விடயத்தில் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்”  என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...