Main Menu

பயங்கரவாத பட்டியலில் இருந்து அமெரிக்கா சூடானை நீக்கியது!

கார்ட்டூமில் உள்ள தூதரக தகவலின் படி, அமெரிக்கா பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் பட்டியலில் இருந்து சூடானை அதிகாரப்பூர்வமாக நீக்கியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த ஒக்டோபர் மாதம் பயங்கரவாத பட்டியலிருந்து சூடான் நீக்கப்படுமென உறுதியளித்திருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1998ஆம் ஆண்டில் கென்யா மற்றும் தான்சானியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் நடந்த அல்-கொய்தா, பயங்கரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 335 மில்லியன் டொலர்களை, சூடான் வழங்கினால் பயங்கரவாதத்திற்கு நிதியளிக்கும் நாடுகளின் கருப்புப் பட்டியலிருந்து சூடானை நீக்க முடியும் என டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கம் கூறியிருந்தது.

இந்த பணம் இழப்பீடை கொடுக்க சூடான் பிரதமர் அப்தல்லா ஹம்தோக் ஒப்புக்கொண்ட நிலையில், பயங்கரவாத பட்டியலிருந்து சூடான் நீக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அதிகாரத்திலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் சர்வாதிகாரி ஒமர் அல்-பஷீரின் நடவடிக்கைகளுக்கு புதிய சிவில் அரசாங்கம் பொறுப்பேற்கக் கூடாது என்று கருதும் வட ஆபிரிக்க தேசத்தில், சிலருக்கு இந்த வியடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

1993இல் அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன், அரசாங்கத்தின் விருந்தினராக வாழ்ந்தபோது சூடான் பட்டியலிடப்பட்டது. இதன்மூலம் ஈரான், வட கொரியா மற்றும் சிரியா உள்ளிட்ட அமெரிக்க கருப்பு பட்டியலில் நான்கு நாடாக சூடான் இணைந்தது.

2000ஆம் ஆண்டில் யேமனில் அல்-கைதா தாக்குதலில் கொல்லப்பட்ட 17 அமெரிக்க துருப்புக்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்க சூடான் முன்பு ஒப்புக் கொண்டமை நினைவிருக்கலாம்.

பகிரவும்...