Main Menu

சரியான நடவடிக்கைகளை எடுத்திருந்தால் பொருளாதார வீழ்ச்சியை தவிர்த்திருக்க முடியும் – பா.சிதம்பரம்

சரியான நிதி மற்றும் மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை செய்திருந்தால் பொருளாதார வீழ்ச்சியை தவிர்த்திருக்க முடியும் என முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் குறித்த அறிக்கையை தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள நிலையில், இது குறித்து பா.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “ஒட்டுமொத்த பொருளாதாரம் வீழ்ச்சி என்ற செய்தி வேண்டுமானால் மத்திய அரசுக்கு ஆச்சரியம் அளிப்பதாக இருக்கலாம். ஏனென்றால் அவர்கள் தான் முதல் காலாண்டில் ஏதாவது ‘பசுமை’ தெரிகிறதா என பல நாட்களாக எதிர்பார்த்தார்கள்.

சரியான நிதி மற்றும் மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை செய்திருந்தால் வீழ்ச்சியை தவிர்த்திருக்க முடியும். ஆனால் எதையும் செய்யாத மத்திய அரசுக்கு இது வெட்கப்படும் படியான விஷயமாக இருக்க வேண்டும்.  ஆனால் மோடி அரசு வெட்கப்படாது.

எங்கள் கோரிக்கைகள் அனைத்தும் செவிடர்களின் காதில் தான் சொல்லப்பட்டன. ஒட்டுமொத்த தேசமும் இப்போது பொருளாதார வீழ்ச்சியால் பெரிய விலையை கொடுக்கிறது. போலியான கதைகளை மக்களிடம் மத்திய அரசு கூறி வந்தது.

ஆனால் அந்த கதைகள் அனைத்தும் மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் அறிக்கை மூலம் இப்போது வெளிச்சத்துக்கு வந்து விட்டது. வேளாண்துறை  வனம் மற்றும் மீன்பிடி தொழில் மட்டுமே 3.4 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

கடவுள் தான் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என்று கூறிய நிதி அமைச்சர்  கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நன்றியுடன் இருக்க வேண்டும். நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 23.9 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...