Main Menu

இரண்டாவது நாளாகவும் வேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் முருகன் வேலூர் சிறையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரண்டாவது நாளாகவும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைதான முருகன் வேலூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 18 ஆம் திகதி சிறைச்சாலைப் பொலிஸார் கைதிகள் அறையில் சோதனை நடத்தினர்.

இதன்போது முருகன் அறையில் இருந்து கையடக்கத் தொலைபேசியை பறிமுதல் செய்தனர். பின்னர் முருகன் தனி அறைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு சலுகைகளும் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் சிறை அதிகாரிகள் தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி முருகன் கடந்த 18 ஆம் திகதியில் இருந்து தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்தார்.

சிறை அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி 20 நாட்களாக இருந்த உண்ணாவிரதத்தை கடந்த 6 ஆம் திகதி முருகன் கைவிட்டார். இதையடுத்து நளினியுடன் சந்திக்க அனுமதியளித்தனர்.

தன்னை ஏற்கனவே இருந்த அறையில் அடைக்குமாறு முருகன் சிறை அதிகாரிகளிடம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தன்னை மீண்டும் பழைய அறைக்கு மாற்றும் வரை தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவேன் என்று சிறை பொலிஸாரிடம் முருகன் நேற்று மனு அளித்தார்.

அதைத் தொடர்ந்து நேற்று காலை முதல் மீண்டும் முருகன் உண்ணாவிரதத்தை தொடர்ந்துள்ளார். இன்று காலை உணவை சாப்பிட மறுத்து இரண்டாவது நாளாகவும் அவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பகிரவும்...