Main Menu

எடப்பாடி அரசுக்கு மக்கள் உரிய பாடம் கற்பிக்க வேண்டும் – வைகோ

மத்திய பா.ஜ.க அரசின் துரோகங்களுக்கு துணையாகச் செயற்படும் முதலமைச்சர் எடப்பாடி அரசுக்கு மக்கள் உரிய பாடம் கற்பிப்பார்கள் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளமையை முன்னிட்டு அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில், தமிழக சட்டப்பேரவையில் நீட் நுழைவுத் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட சட்டத்தை ஏற்க முடியாது என்று மத்திய பாஜக அரசு உடனடியாக மறுத்துவிட்டதை இரண்டு ஆண்டு காலமாக மறைத்து, தமிழக மாணவர்களுக்கு நம்பிக்கை ஊட்டி கழுத்து அறுத்த அதிமுக அரசின் செயலை ஒருபோதும் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராக அமைதி வழி அறப்போராட்டத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, 13 பேரை படுகொலை செய்த அதிமுக அரசின் கொடுஞ்செயலை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.

மாநில உரிமைகள் அனைத்தையும் டெல்லியின் காலடியில் அடகுவைத்துவிட்டு அடிமைச் சேவகம் புரியும் எடப்பாடி பழனிசாமி அரசை ஆட்சிப் பீடத்திலிருந்து தூக்கி எறிய வேண்டும் என்ற கொந்தளிப்பு தமிழக மக்கள் உள்ளத்தில் எப்போதோ எழுந்துவிட்டது.

அதற்கு முன்னோட்டமாகத்தான் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் நல்ல தீர்ப்பு அளித்தார்கள். தற்போது விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களிலும் மக்கள் விரோத அதிமுக வேட்பாளர்களை தோற்கடிக்க வேண்டும் என்று வாக்காளப் பெருமக்கள் காத்திருக்கின்றார்கள்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களில் மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு மதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு மூச்சுடன் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...