Main Menu

ஆந்திராவில் 60இற்கும் மேற்பட்டோர் சென்ற படகு விபத்து: 11 பேரின் உடல்கள் மீட்பு

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 60இற்கும் அதிகமானவர்கள் சுற்றுலா சென்ற படகு ஆற்று வெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்த 11 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் மீட்புப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் வழியாக பாயும் கோதாவரி ஆற்றில் தற்போது வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்கிறது. இன்று பிற்பகல் நிலவரப்படி வினாடிக்கு 5.13 இலட்சம் கன அடி தண்ணீர் ஆற்றில் இருந்து வெளியேற்றப்படுகிறது.

இந்நிலையில், தேவிப்பட்டினம் அருகாமையில் கண்டி போச்சம்மா ஆலயத்தில் இருந்து பாப்பிகொன்டலு என்ற சுற்றுலாத் தலத்துக்கு கோதாவரி ஆற்றின் வழியாக 60இற்கும் அதிகமானவர்கள் ஆந்திர மாநில அரசின் சுற்றுலாத்துறைக்குச் சொந்தமான படகில் சென்றனர்.

இந்நிலையில் ஆற்றுச் சுழலில் சிக்கிய படகு திடீரென்று நிலைதடுமாறி கவிழ்ந்தது. தகவலறிந்து விரைந்து சென்ற மீட்பு படையினர் ஆற்றுக்குள் மூழ்கி கொண்டிருந்தவர்களில் 23 பேரை உயிருடன் காப்பாற்றி கரை சேர்த்தனர்.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பகிரவும்...