Main Menu

வெற்றிகரமாக விஜயத்தை முடித்துக் கொண்ட கன்டபெரியின் பேராயர்

இலங்கைக்கு விஜயம் செய்திருந்த (Canterbury) கன்டபெரியின் பேராயர் அதிமேதகு ஜஸ்ரின் வெல்பி (Justin Welby)ஆண்டகை நேற்று இலங்கைக்கான தமது விஜயத்தை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலின் பின்னரான ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதை பிரதான நோக்கமாக கொண்டு பேராயர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.

கன்டபெரியின்  பேராயர் இலங்கை கத்தோலிக்கத் திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்க்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் இலங்கைத் திருச்சபையின் பேராயர் டிலோராஸ் ஆர் கனகசபை ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடினார்.

கட்டுவாபிட்டிய தேவாலயத்திற்குச் சென்ற பேராயர் குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக சிறப்பு ஆராதனையில் ஈடுபட்டதோடு அவர்களின் உறவினர்களையும், காயப்பட்டவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இலங்கைத் திருச்சபையின் ஏற்பாட்டில் சர்வ மதத் தலைவர்களை சந்தித்து இன, மதங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் சமாதானம் தொடர்பிலும் பேராயர் கலந்துரையாடினார்.

கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்த கன்டபெரியின் பேராயர் ஜஸ்ரின் வெல்பி ஆண்டகை மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகா நாயக்கர்களையும் சந்தித்து, கலந்துரையாடினார்.

பேராயர் தமது மூன்றுநாள் விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இன்று காலை இங்கிலாந்தின் உயர்  ஸ்தானிகருடனான  சந்திப்பினை  அடுத்து கன்டபெரியின் பேராயர் ஜஸ்ரின் வெல்பி ஆண்டகை, நாடு  திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...