Main Menu

திட்டமிட்ட வகையில் இனவழிப்பும், வரலாற்று திரிபுபடுத்தலும் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன

யுத்தம் மௌனிக்கப்பட்ட நாளில் இருந்து இன்றுவரை மிக நன்கு திட்டமிட்ட வகையில் கட்டமைக்கப்பட்டு இனவழிப்பும், வரலாற்றுத் திரிபுபடுத்தலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஆளும் அதிகார வர்க்கம் தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கிளிநொச்சியில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘பல தசாப்தங்களாக இன விடுதலையை வென்றெடுப்பதற்காக சதா போராட்டமே வாழ்வாகிப் போன எமது மக்களின் உரிமைக் குரல்கள் அதிகாரத்தில் உள்ள ஆதிக்க சக்திகளினால் தொடர்ந்தும் நசுக்கப்பட்டே வந்திருக்கின்றன.

தமிழ் மக்களின் நீதி வழியிலான தன்னாட்சி உரிமைப் போராட்டத்தை பயங்கரவாதமாக உலக நாடுகளிடம் கொண்டு சேர்த்த பங்கு அரச மற்றும் அரச சார்புடைய ஊடகங்களையே சாரும். தமிழ் மக்கள் தமது உரிமைகளைக் கோருவது ‘பயங்கரவாதம்’ என்று கூறுமளவுக்கு அவர்களின் நடவடிக்கைகள் இருந்து வந்துள்ளன.

இன விடுதலைக்காகப் போராடும் மக்களின் மிகப் பெரும் ஆயுதமாகவும் பலமாகவும் ஊடகங்களே கோலோச்சியிருக்கின்றன என்பது வரலாற்று உண்மை. நவீன காலங்களில் ஊடகம் ஒரு தேசிய இனத்திற்கு உயிர்நாடி போன்றது.

தனது விடுதலைக்காகப் போராடுகின்ற தேசிய இனம் தனது தொன்மையான வரலாறு, கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை தொடர்ந்து வரும் சந்ததிக்கு ஊடுகடத்துவது அவசியம். ஒரு தேசிய இன அடையாளங்களே அம்மக்கள் கூட்டம் வாழிடங்கள், அவற்றின் வரலாறு, மொழி, கலை, கலாசாரப் பண்பாடு ஆகியனவாகும். எனவே தான் எமது தமிழ் இனம் மிகுந்த அக்கறையோடுந் துடிப்புடனும் செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகி வருகின்றது.

ஆளும் அதிகார வர்க்கங்களினால் ஆயுதம் ஏந்திப் போராட நிர்ப்பந்திக்கப்பட்ட எமது மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் 2009ம் ஆண்டு மௌனிக்கப்பட்ட பின்னாளிலிருந்து இன்றுவரை மிக நன்கு திட்டமிட்;ட வகையில் கட்டமைக்கப்பட்டு இனவழிப்பும், வரலாற்றுத் திரிபுபடுத்தலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன’ என குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...