30 வருட யுத்தம் நடத்திய நாம் இப்போது நண்பர்களாகவே பழகுகிறோம் – மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க
உங்களோடு 30 வருடமாக யுத்தம் செய்திருக்கிறோம். உங்களைப் புனர்வாழ்வளிப்பதற்காகப் பொறுப்பேற்றதன் பின்னர் உங்களிடம் நீங்கள் எங்கு இருந்தீர்கள், எப்பிரதேசத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று நாங்கள் கேட்டதில்லை. நீங்கள் யார் என்பதனையெல்லாம் மறந்துவிட்டு நண்பர்களாக, சகோதரர்களாகவே பழகினோம் என்று மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கு தொழில், வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுபெற்று நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஆயத்தப்பட்டோம். யாழ்ப்பாணத்தில் துரையப்பா கொல்லப்பட்டதிலிருந்து தொடங்கிய யுத்தம் 30 வருடங்கள் நடைபெற்றது. இந்த பத்து வருடத்தில் நாங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். அந்தவகையில் இங்கிருப்பவர்களோடு நேருக்கு நேராக சண்டையிட்டிருக்கிறேன். உங்களோடு 30 வருடமாக யுத்தம் செய்திருக்கிறோம். உங்களைப் புனர்வாழ்வளிப்பதற்காகப் பொறுப்பேற்றதன் பின்னர் உங்களிடம் நீங்கள் எங்கு இருந்தீர்கள், எப்பிரதேசத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று நாங்கள் கேட்டதில்லை. நீங்கள் யார் என்பதனையெல்லாம் மறந்துவிட்டு நண்பர்களாக, சகோதரர்களாகவே பழகினோம்.
நாட்டில் ஜே.வி.பி. யினுடைய பிரச்சினை இருந்த காலத்தில் அவர்களோடு சண்டையிட்டிருக்கிறோம். பிடித்தோம், அழித்தோம். அதன்பின்னர் நாட்டுக்காக அவர்களைச் செயற்படுத்தினோம். அவர்களோடு நன்றாகவே பழகுகின்றோம். நாட்டின் சமாதானத்துக்காகவே முப்படையினரும் பாடுபட்டோம். அதற்காகவே எல்லோரும் உழைத்தார்கள்.
தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் இணைந்து வாழக்கூடிய மாவட்டமாக திருகோணமலை மாவட்டம் இருக்கிறது. யுத்தம் நிறைவு பெற்ற பின்னர் புனர்வாழ்வளிப்பின் பின்னர் பல்வேறு உதவிகளை எமது பணியகத்தின் ஊடாக மேற்கொண்டு வருகிறோம்.
சிறுவயதில் யுத்தத்திற்குச் சென்றபோது, பெற்றோரை, தாய், தந்தையரை இழந்தீர்கள், கல்வியை இழந்தீர்கள், இப்போது படிப்பு இல்லாமல் போயிருக்கிறது, வீடு வாசல் இல்லாமல் போயிருக்கிறது. அவற்றையெல்லாம் மீண்டும் ஏற்படுத்தித் தருவதற்காக ஆயத்தமாகியிருக்கிறோம்.
யுத்தம் முடிந்து பத்து வருடங்களாகிவிட்டன. நாம் எல்லோரும் இந்தப்பிரதேசத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்வது என்பது பற்றி சிந்திக்க வேண்டும். நாங்கள் முன்னர் எப்படியிருந்தோம், பின்னர் என்ன நடந்தது. இனிவரும் காலத்தில் என்ன தேவை என்பது பற்றி நாம் எல்லோரும் மன ஒருமைப்பாட்டுடன் செயற்பட வேண்டும்.
2014 -17ஆம் ஆண்டுகளில் 10 மில்லியனுக்கும் அதிகமான பல்வேறு உதவிகளைச் செய்திருக்கிறோம். திருகோணமலை மாவட்டத்திலுள்ள 550 புனர்வாழ்வளிக்கப்பட்ட குடும்பங்களும் பயன்பெறும் வகையில் 16 லட்சம் ரூபாவை இந்த வருடத்தில் செலவிட்டுள்ளோம். அத்தோடு அரசாங்க அதிபரூடாகவும் 3 மில்லியன் ரூபா பெறுமதியான உதவிகளை வழங்குவதற்காக கையளித்துள்ளோம். அதன் ஊடாகவும் பல்வேறு உதவிகள் வழங்க ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம். தொடர்ந்தும் உங்களது மேம்பாட்டுக்காக உதவிகளைப் புரிவதற்குத் தயாராக இருக்கிறோம் என்றார்.