Main Menu

2021இல் மேலும் 40 வீதம் மனிதாபிமான உதவி தேவைப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் – ஐ.நா. அறிக்கை

கொரோனா வைரஸ் தொற்றுநோய், மனிதாபிமான உதவி தேவைப்படுபவர்களின் எண்ணிக்கையை உச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, 2021ஆம் ஆண்டில் 33 பேரில் ஒருவருக்கு உணவு, நீர் மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவி தேவைப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டை விட 2021இல் மேலும் 40 வீதம் மனிதாபிமான உதவி தேவைப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என கணிப்பிடப்பட்டுள்ளதாக ஐ.நா.பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் 235 மில்லியன் மக்களுக்கு இதுபோன்ற தேவைகள் காணப்படுவதுடன் சிரியா, யேமன், ஆப்கானிஸ்தான், கொங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் எத்தியோப்பியாவில் இந்தத் தொகை அதிகமாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, உலகளாவிய தொற்றுநோயின் தாக்கம் தொடர்ந்து மோசமடைந்து வருவதால் மனிதாபிமான உதவித் திட்டங்கள் கடுமையான குறைபாடுகளை எதிர்கொண்டுள்ளதாக அன்டோனியோ குடரஸ் தெரிவித்துள்ளார்.

1990-களுக்குப் பின்னர் முதன்முறையாக, தீவிர வறுமை அதிகரிப்பு, ஆயுட்காலம் குறைவு, எச்.ஐ.வி, காசநோய் மற்றும் மலேரியாவால் ஆண்டுதோறும் இறப்பு எண்ணிக்கை இரட்டிப்பாகும் என கணிப்பிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பட்டினியை எதிர்கொள்ளும் மக்களின் எண்ணிக்கையும் இரட்டிப்பாகும் என அஞ்சுவதாக ஐ.நா. பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...