12 மாநிலங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் – 95 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
பாராளுமன்றத்துக்கு இரண்டாவது கட்டமாக 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இன்று தொடங்கியது.
முதல்கட்ட பாராளுமன்ற தேர்தல் கடந்த 11-ஆம் தேதி 91 தொகுதிகளுக்கு நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் 95 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. புதுச்சேரியில் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கும், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.
அதேபோல், கர்நாடகா 14, மகாராஷ்டிரா 10, உத்தரபிரதேசம் 8, பீகார் 5, அசாம் 5, ஒடிசா 5, சத்தீஸ்கர் 3, காஷ்மீர் 2, மணிப்பூர் 1 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
சரியாக காலை 7 மணிக்கு அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது வாக்கை பதிவு செய்தார்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் நிலையில், பதிவாகும் வாக்குகள், வருகிற மே 23-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.