Main Menu

ஹொங்கொங்கில் ஜனநாயக ஆதரவு பத்திரிகை உரிமையாளருக்கு பிணை மறுப்பு!

ஹொங்கொங்கில் முறைகேடு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள ஜனநாயக ஆதரவு பத்திரிகை உரிமையாளர் ஜிம்மி லாய்க்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தனது அலுவலகக் கட்டடத்தின் உரிமையாளருடன் மேற்கொண்ட குத்தகை ஒப்பந்தத்தை மீறியதாக ஜிம்மி லாய் மீது பொலிஸார் புதன்கிழமை முறைகேடு வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) ஆஜராகி, முறைகேடு வழக்கில் முன் பிணை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

எனினும், அவருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹொங்கொங்கில் வெளியாகும் ‘அப்பிள் டெய்லி’ நாளிதழின் உரிமையாளரான ஜிம்மி லாய், ஜனநாயகத்துக்கு ஆதரவாக கருத்துகளைத் தெரிவித்து வருபவர். இவர் கடந்த ஒகஸ்ட் மாதம் சீனாவின் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு பின்ன பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து பொலிஸார், அவரது அலுவலகத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் திடீர் சோதனை நடத்தி ஆவணங்களை எடுத்துச் சென்றனர். இந்த நிலையில், அவர் கடந்த புதன் கிழமை கைதுசெய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...