வேலையற்ற பட்டதாரிகள் யாழில் போராட்டம்

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தமக்கான வேலை வாய்ப்பை வழங்குமாறு வலியுறுத்தி போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
வடக்கு மாகாண சபைக்கு முன்பாக அவர்கள் இன்று (புதன்கிழமை) காலை இவ்வாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாகாண ஆளுநரின் பொதுமக்கள் தினம் கைதடியில் அமைந்துள்ள மாகாண முதலமைச்சர் செயலகத்தில் நடைபெற்ற நிலையிலேயே, இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அலுவலகம் முன்பாக பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள், தமக்கான நியமனத்தை கால தாமதமின்றி விரைந்து வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் உள்வாரி பட்டதாரி, வெளிவாரி பட்டதாரி என பாகுபாடு காட்ட வேண்டாம், அனைவருக்கும் நியமனம் வேண்டும், கால தாமதம் வேண்டாம், படித்தவர்களுக்கு வேலை வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் பட்டதாரிகள் இதன்போது முன்வைத்தனர்.
மேலும் ‘கூலி வேலை செய்து பட்டப்படிப்பை படித்தது எங்கள் தவறா’, ‘நியமனத்தில் உள்வாரி வெளிவாரி என்ற பாகுபாடு வேண்டாம்’ உள்ளிட்ட பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் கைகளில் ஏந்தியவாறு பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார தொண்டர்களும் வடக்கு மாகாண சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
பகிரவும்...