Main Menu

‘வேண்டாம் வேண்டாம் கொரோனா வேண்டாம்’ – மட்டக்களப்பில் போராட்டம்

தென் கொரியாவில் இருந்து நாடு திரும்பிய 166 பேர் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழக கொரோனா தடுப்பு பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து பிரதேச பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ரிதிதென்னை இக்ராஹ் வித்தியாலயத்திற்கு மாணவர்கள் செல்லாமல் வித்தியாலய நுழைவாயிலை மூடி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது ‘வேண்டாம் வேண்டாம் கொரோனா வேண்டாம்’, ‘கொண்டு வராதே கொண்டு வராதே கொரோனாவை எங்கள் பிரதேசத்திற்கு கொண்டு வராதே’, ‘இன ரீதியாக அழிக்கும் முயற்சியை நிறுத்து’, ‘சிறுபான்மை மக்களை இலக்கு வைக்காதே’, ‘எமது மாகாணத்தை அழிக்க நேசிக்கும் சதியை நிறுத்து’, ‘மக்களை காப்பாற்று’ போன்ற பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியாவாறு போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்தோடு ஜெயந்தியாய அஹமட் ஹிறாஸ் வித்தியாலயத்தில் மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்காமை காரணமாக பாடசாலை கல்வி நடவடிக்கை முற்றாக முடங்கின.

ரிதிதென்னை இக்ராஹ் வித்தியாலயம் மற்றும் ஜெயந்தியாய அஹமட் கிறாஸ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு அதிபர், ஆசிரியர்கள் மாத்திரம் சமூகமளித்திருந்தனர்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி, ஈரான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இலங்கை வரும் பயணிகளை மட்டக்களப்பு தனியார் பல்கலையில் தனிமைப்படுத்தி சோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காகவே மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தினை கொரோனா மத்திய நிலையமாக மாற்றி அங்கு தங்க வைக்கப்பட்டு தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பெரும்பாலான பொதுமக்களால் எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...