வெட்டுமகடை துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாரி கைது
களுத்துறை வெட்டுமகடை பள்ளிவாசல் வீதி பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேகநபர் இவ்வாறு கைதாகியுள்ளார்.
கைதானவர் பயாகல, மெஹிமுல்ல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய அவர், ‘போஞ்சியா’ என்றழைக்கப்படும் சம்பத் குமாரதுங்க என தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேகநபர் தொடர்பாக மாளிகாவத்தை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கெமராக்களை ஆய்வு செய்த பின்னர் கிடைத்த தகவலின் அடிப்படையில், மாளிகாவத்தை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மறைந்திருந்த போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேகநபர் ஹெரோயின் கடத்தல் மற்றும் போதைப்பொருள் வைத்திருந்தமை தொடர்பாக பல சந்தர்ப்பங்களில் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஒருவராவார்.
கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி இன்று (03) களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
கடந்த 28ஆம் திகதி காலை, களுத்துறை வெட்டுமகடை பகுதியில் கார் ஒன்றில் பிரவேசித்த துப்பாக்கிதாரி ஒருவர், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பியோடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
