வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்; 150 மி.மீ. வரை மழை பெய்யும் சாத்தியம்
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இன்று (13) ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.
இதன் தாக்கத்தினால், இன்று முதல் அடுத்த சில நாட்களுக்குத் நாட்டின் பல பகுதியிலும், நாட்டைச் சுற்றியுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளிலும் மழைப்பொழிவு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இது தொடர்பாக திணைக்களம் வெளியிடும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகளைத் தொடர்ந்து கவனிக்குமாறு பொதுமக்கள், கடற்படையினர் மற்றும் மீனவ சமூகத்தினர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நாட்டின், பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் சுமார் 100-150 மி.மீ வரையிலான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள சில இடங்களில் 75 மி.மீ-க்கு அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் தற்காலிகமான உள்ளூர் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கத் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
காலை வேளைகளில் சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் பனிமூட்டமான நிலை நிலவக்கூடும்.
காற்று:
காற்று வடகிழக்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடும்.
காற்றின் வேகம் மணிக்கு 20 முதல் 30 கிலோமீட்டர் வரை இருக்கும்.
கடல் நிலை:
நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகள் அமைதியாகவோ அல்லது மிதமான நிலையிலோ காணப்படும்.
இடியுடன் கூடிய மழையின் போது, தற்காலிகமாக பலத்த காற்று (மணிக்கு 60-70 கி.மீ வேகம்) வீசக்கூடுவதுடன், கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படலாம்.
