Main Menu

யாழ். மாநகர முதல்வரை சந்தித்தார் ஜப்பான் தூதுவர்

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடினார்.

யாழ் மாநகர சபையில் இன்று (புதன்கிழமை) காலை 10 மணியளவில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலனும் உடனிருந்தார்.இதன்போது மாநகர முதல்வரால் ஜப்பான் தூதுவருக்கு நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஜப்பான் தூதுவர் சமகால நிலைமைகள் தொடர்பில் பல்வேறுபட்ட தரப்புக்களுடனும் சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச் சந்திப்பின்போது பல்வேறு விடயங்கள் பற்றி ஆராயப்பட்டது, ஜப்பான் கடந்த காலங்களில் யாழ் மாநகர சபையின் எல்லைக்குள் செய்துவந்த பொருளாதார மற்றும் அபிவிருத்தி பணிகளுக்கு யாழ் மாநகர முதல்வர் என்ற வகையிலும் மாநகர மக்கள் சார்பிலும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் இலங்கையில் சமாதானம் நிலவிய காலத்தில் ஜப்பானால் சமாதான பேச்சுவார்த்தைக்கு காத்திரமான பங்களிப்பு செய்யப்பட்டது குறிப்பாக இலங்கைக்கான விசேட தூதுவர் யசுசி அகாஷி அந்த பணிகளிலே ஈடுபட்டிருந்தார்.

அதேபோன்று தற்சமயமும் இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றுக்கு ஜப்பானிய அரசு பங்களிப்பு செய்ய வேண்டும் என்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இலங்கைக்கு ஜப்பான் உதவி வருகின்ற நிலையில் இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முன்நிபந்தனையாக இலங்கையில் ஒரு சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசுக்கு ஜப்பானிய அரசு விடுக்க வேண்டும் என்று மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஜப்பானிய தூதுவரிடம் கேட்டுக்கொண்டார்.

பகிரவும்...