Main Menu

மீண்டும் பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இலங்கை

35 ஓட்டங்களினால் பாகிஸ்தானை வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேச கிரிக்கெட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு – 20 தொடரின் இரண்டாவது போட்டி இன்றைய தினம் இரவு 7.00 மணிக்கு லாகூரில் ஆரம்பமானது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 182 ஓட்டங்களை குவித்தது.

183 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பாகிஸ்தான் அணியின் முதல் ஐந்து விக்கெட்டுக்களும் 52 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டன.

அதன்படி பாகர் சமான் 6 ஓட்டத்துடனும், பாபர் அசாம் 3 ஓட்டத்துடனும், அகமட் ஷெஜாத் 13 ஓட்டத்தையும், உமார் அக்மல் டக்கவுட்டுடனும், சப்ராஸ் அஹமட் 26 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதன் பின்னர் 6 ஆவது விக்கெட்டுக்காக இமாட் வஸிம் மற்றும் அஷீப் அலி ஆகியோர் ஜோடி சேர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த பாகிஸ்தான் அணி 15 ஓவரில் 5 விக்கெட்டுக்களை இழந்து 117 ஓட்டங்களை குவித்தது.

எனினும் 15.5 ஆவது ஓவரில் இமாட் வஸீம் மொத்தமாக 29 பந்துகளை எதிர்கொண்டு 47 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, வஹாப் ரியாஸ் ஆடுகளம் புகுந்தார்.

தொடர்ந்து களமிறங்கியவர்கள் ஒருவர் பின் ஒருவராக ஆட்டமிழந்து வெளியேற பாகிஸ்தான் அணி 19 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 35 ஓட்த்தினால் தோல்வியைத் தழுவியது.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் நுவான் பிரதீப் 4 விக்கெட்டுக்களையும், வசிந்து ஹசரங்க 3 விக்கெட்டுக்களையும், இசுறு உதான 2 விக்கெட்டுக்களையும், கசூன் ராஜித ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதன் 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 தொடரை இலங்கை அணி 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. 

பகிரவும்...