Main Menu

மலையகத்தில் வெள்ளம் காரணமாக விவசாயிகள் பாதிப்பு!

மலையகத்தில் மூன்று நாட்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் குடும்ப வருமானத்திற்காக விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த அதிகமானோர் மழை காரணமாகவும், வெள்ளம் காரணமாக தனது தோட்டங்களில் பயிரிடப்பட்ட மரக்கறி வகைகள் அனைத்தும் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்டதால் விவசாயிகள் பாரிய நட்டத்துடன் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைகின்றனர்.

கொட்டகலை, பத்தனை கிறேக்கிலி தோட்டம் போன்ற பகுதிகளில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெவோன் நீர்வீழ்ச்சிக்கு நீரை ஏந்தும் கிளை ஆறான பத்தனை ஆறு பெருக்கெடுத்ததால் மரக்கறி தோட்டங்களில் வெள்ளம் பாய்ந்தோடியதால் இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதிகமான விவசாயிகள் விவசாய நடவடிக்கையை மேற்கொள்வதற்கு வங்கிகளில் மற்றும் தங்க நகைகளையும் அடகு வைத்தும், கடன் வழங்கும் நிறுவனங்களில் அதிகமான கடன் தொகையை பெற்று விவசாய நடவடிக்கையை மேற்கொண்டதாகவும், வெள்ளப்பெருக்கினால் செலவு செய்யப்பட்ட தொகையை கூட மீட்க முடியாத அளவிற்கு பாரிய பொருளாதார பிரச்சினைகளை சந்திப்பதாக விவசாயத்தை நம்பி இருக்கும் விவசாய குடும்பங்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் இதேபோன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நுவரெலியா மாவட்ட விவசாய திணைக்களம் எவ்வித நிவாரண உதவிகளையும் தரவில்லை என இவர்கள் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மீண்டும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் உதவிகளை வழங்க வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கையாகும்.

பகிரவும்...