Main Menu

மக்களை ஏமாற்றிய சபாநாயகர் பதவி விலக வேண்டும் – தலதா அத்துகோர

சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி உண்மை நிலையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் நாட்டு மக்களை ஏமாற்றிய சபாநாயகர் பதவி விலக வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை (10) கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ காரியாலயத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பாராளுமன்றத்தை சுத்தப்படுத்துவதாக தெரிவித்தே தேசிய மக்கள் சக்தி அதிகாரத்துக்கு வந்தது. ஆனால் தற்போது நாட்டின் மிக உயர்ந்த இடமான பாராளுமன்றத்தின் சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பில் நாட்டில் பிழையாக பேசப்பட்டு வருகிறது.

அதேநேரம் சபாநாயகர் அசோக்க ரன்வல பாராளுமன்றத்தில் சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டதுடன் பாராளுமன்ற இணையத்தளத்தில் அவரின் பெயருக்கு முன்னால் “கலாநிதி” என்ற பட்டம் எழுதப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கலாநிதி என்ற சொல் அகற்றப்பட்டுள்ளது.

அதேநேரம் பாராளுமன்ற தேர்தல் பிரசாரங்களின்போது கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களின் படங்களுடன் அவர்களின் கல்வித் தரம் தொடர்பிலும் கம்பஹா மாவட்ட தலைமை வேட்பாளராக தற்போதைய அமைச்சர் விஜித்த ஹேரத்தின் படத்துடன் பத்திரிகைகளுக்கு வழங்கியிருந்த விளம்பரத்தில் அசோக்க ரன்வலவின் பெயருடன் அவர் ஜப்பான் வசேதா பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்றிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

என்றாலும் இந்த சர்ச்சை நாட்டுக்குள் ஏற்பட்டுள்ளபோதும் இது தொடர்பில் சபாநாயகரோ தேசிய மக்கள் சக்தியோ எந்த பதிலையும் நாட்டுக்கு தெரிவிக்கவி்லலை.

அதனால் ஐக்கிய தேசிய கட்சியின் ஊடக பிரிவு இது தொடர்பில் அந்நாட்டு பல்கலைக்கழக தொடர்பாடல் பிரிவில் கேட்கப்பட்டிருந்த விளக்கத்துக்கு அவர்கள் எமக்கு வழங்கிய பதிலில், ஜப்பான் வசேதா பல்கலைக்கழகத்தில் அவ்வாறான பெயரில் கலாநிதி பட்டம் பெற்றதாக எந்த தகவலும் இல்லை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பாராளுமன்றத்தின் சபாநாயகருக்கு இவ்வாறான பதவி இருக்க வேண்டும் என்ற எந்த தேவையும் இல்லை. ஆனால் நாட்டின் உயரிய இடமான பாராளுமன்றத்தின் சபாநாயகர் தனது கல்விச் சான்றிதழ் தொடர்பில் நாட்டு மக்களுக்கு பொய் தகவலை வழங்கியிருக்கிறார். இது பாராளுமன்றத்தின் கெளரவத்தை அசிங்கப்படுத்தும் செயலாகும்.

சபாநாயகர்தான் அரசியலமைப்பு பேரவையின் தலைவராக இருந்துகொண்டு இந்த நாட்டின் உயர் பதவிகளுக்கு ஆட்களை நியமிக்க பெயர்களை பரிந்துரை செய்பவர். அப்படியான ஒருவர் இவ்வாறான ஒரு செயலை செய்வது என்பது அந்த பதவிக்கே அகெளரவமாகும்.

அதனால் சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைக்கு சபாநாயகர் அசோக்க ரன்வல விளக்கமளிக்க வேண்டும்  அல்லது அவர் சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.

பகிரவும்...
0Shares