Main Menu

மக்களுக்கான அபிவிருத்தியே தவிர அபிவிருத்திக்காக மக்களல்ல அங்கஜன்

தென்மராட்சி- மறவன்புலவு பகுதியில் எந்தவொரு அனுமதியும் இன்றி மக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி செயற்திட்டத்தினை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மறவன்புலவு பகுதியில் அமைக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி நிறுவனத்திற்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

தென்மராட்சி பிரதேச செயலர் தேவநந்தினி பாபு தலைமையில், (29) இன்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலில் காற்றாலை மின் உற்பத்தி நிறுவனத்தினர், மத்திய சுற்றாடல் திணைக்கள வட மாகாண உதவிப் பணிப்பாளர்,பொலிஸ் அதிகாரி, கிராம மக்கள் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

கலந்துரையாடலின் போது பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கருத்து தெரிவிக்கையில்

நாம் மறவன்புலவு காற்றாலை மின் உற்பத்தி செயற்பாடுகளை நேரடியாக சென்று பார்வையிட்டிருந்தோம். ஊர் மக்கள் அனைவரும் இந்தச் செயற்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மக்களுடைய பிரச்சனைகளைத் தீர்க்காமல் வரும் அபிவிருத்திகளை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அபிவிருத்தி என்பது மக்கள் வாழ்வியலைப் பாதிப்பதாக இருக்கக்கூடாது.

மக்களுக்காகவே அபிவிருத்தி; அபிவிருத்திக்காக மக்கள் அல்ல. பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையின் அனுமதி இல்லாமல் எந்தவொரு நிறுவனமும் வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க முடியாது. குறித்த நிறுவனம் ஆறு தனியார் காணிகள் மற்றும் இரண்டு அரச காணிகளில் தமது வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இருப்பினும் அதில் ஒரு காணி அரச காணியா, தனியார் காணியா என்பதில் பிரதேச செயலகத்திற்கு ஐயம் உள்ளது.

இது தொடர்பாக தென்மராட்சி பிரதேச செயலர் நீதிமன்றில் வழக்குத் தொடர வேண்டும். அத்துடன் அரச காணியில் குறித்த நிறுவனம் எந்தவொரு அனுமதியும் இன்றி எவ்வாறு பாதை அமைக்க முடியும்? யாராக இருப்பினும் உரிய விதிமுறைகளைப் பின்பற்றியே வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும். குறித்த காற்றாலை நிறுவனம் மறுவன்புலவு பகுதியில் காற்றாலை அமைப்பதனால் எந்தவித பாதிப்பும் மக்களுக்கு இல்லை என மத்திய சுற்றாடல் திணைக்களம் உறுதி செய்ய வேண்டும். அத்துடன் உரிய அனுமதிகளை குறித்த ஒப்பந்த நிறுவனம் மின்சார சபை ஊடாக பெற்றுக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதில் எமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.

அத்துடன் குடிமனையிலிருந்து 300 மீற்றருக்கு அப்பால் தான் காற்றாலைகள் அமைய வேண்டும் எனக் கூறப்படுகிறது. ஆனால் மறவன்புலவில் குடிமனைகளுக்கு மிக அருகாமையில் தான் காற்றாலைகள் அமையவுள்ளன. அத்துடன் குளங்களில் காற்றாலை நிறுவனம் நீர் எடுப்பதனை அனுமதிக்க முடியாது. விவசாயம் அழிவின் விளிம்பில் உள்ளது. மேலும் அதனை அழிக்க இடமளிக்க மாட்டேன். ஆகவே குறித்த நிறுவனம் உடனடியாக தனது செயற்பாடுகளை நிறுத்தி உரிய அனுமதிகளைப் பெற்ற பின்னரே செயற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டும். இது தொடர்பாக பிரதேச செயலர் கண்காணிக்க வேண்டும் என பணிப்புரை விடுத்திருந்ததோடு, மக்கள் நலன் கருதியதாகவும் கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் கருத்துக்களை ஏற்றுக் கொண்ட காற்றாலை மின் உற்பத்தி நிறுவனத்தினர் தாம் மின்சார சபையுடன் கலந்தாலோசித்து உரிய அனுமதிகளைப் பெற்று வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க முயற்சி எடுப்பதாகவும் காற்றாலை ஒப்பந்ததாரர்கள் தெரிவித்திருந்தனர்.

பகிரவும்...