Main Menu

போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களைப் பழிவாங்க வேண்டாம் – சென்னை உயர் நீதிமன்றம்

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரச மருத்துவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு நிறுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அரச மருத்துவர் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட எட்டு மருத்துவர்கள் தாக்கல் செய்த வழக்கு இன்று நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது.

இதன்போது வழக்குத் தொடுத்த மருத்துவர்கள் தரப்பில், அரசு அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் பணிக்குத் திரும்பி விட்ட நிலையில் அவர்களைப் பணியிட மாற்றம் செய்யும் உத்தரவை அரசு திரும்பப் பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

எனவே வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரச மருத்துவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு நிறுத்த வேண்டும் என்று தெரிவித்த நீதிபதி, விசாரணையை நவம்பர் 26-ம் திகக்குத் தள்ளிவைத்தார்.

பதவி உயர்வு, மத்திய அரச மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் அரச மருத்துவர்கள் மீது பணியிட மாற்றம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போராட்டத்தை அரசு மருத்துவர்கள் மீள பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட அரச மருத்துவர்களைப் பணியிடை மாற்றம் செய்யும் உத்தரவிற்கு தடை விதிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த அரச மருத்துவர் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட எட்டு மருத்துவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

பகிரவும்...