Main Menu

பொது சிவில் சட்டம் என்ற பெயரில் பா.ஜனதா மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிறது- திருமாவளவன் கண்டனம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- பொது சிவில் சட்டம் என்ற பெயரில் மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் அடைய முற்படும் பா.ஜ.க. அரசின் மக்கள் விரோதப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்திய சட்ட ஆணையத்தின் இந்த அறிவிப்பை உடனே திரும்பப் பெற வேண்டுமென்று வி.சி.க. சார்பில் வலியுறுத்துகிறோம். இந்திய சட்ட ஆணையம் பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்களின் கருத்தை 30 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என அறிவிப்புச் செய்துள்ளது. தேர்தலை மனதில் வைத்து பா.ஜ.க. அரசின் தூண்டுதலால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அனைத்துத் தளங்களிலும் படுதோல்வி அடைந்து விட்ட பா.ஜ.க. அரசு, மக்களின் கவனத்தைத் தனது தோல்வியிலிருந்து திசை திருப்புவதற்காகவே இத்தகைய பிரச்சினைகளை எழுப்புகிறது. விலைவாசி ஏற்றம், வேலையில்லாத பிரச்சினை, பொருளாதார வீழ்ச்சி என சுதந்திர இந்தியாவில் அமைந்த ஆட்சிகளிலேயே மிகவும் மோசமான ஆட்சி இந்த பா.ஜ.க. ஆட்சிதான் என்ற விமர்சனத்தை மோடி அரசு சந்தித்துக் கொண்டிருக்கிறது. நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்துவதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத மோடி அரசு தனக்குத் தெரிந்த ஒரே பிற்போக்கு-பெரும்பான்மை மதவாத அரசியலைக் கையில் எடுத்து மக்களைப் பிளவுபடுத்துவதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறது. முஸ்லிம்களைக் குறி வைத்து தாக்குதல் தொடுப்பதன் மூலம் இந்தியாவில் பெரும்பான்மை மதத்தவராக இருக்கும் இந்துக்களின் ஆதரவைப் பெற முடியும் என்று பா.ஜ.க. மனப்பால் குடிக்கிறது. 2024 பொதுத் தேர்தலில் ஆட்சி அதிகாரத்திலிருந்து தாம் தூக்கி எறியப்படுவோம் என்பதை முன்கூட்டியே புரிந்துகொண்டதால் மக்களைப் பிளவுபடுத்தும் சமூகப் பிரிவினைவாத அரசியலில் அது தஞ்சம் புகுந்துள்ளது. அதனைத் தீவிரமாக முடுக்கிவிடுகிறது. அரசியல் லாபத்துக்காக நாட்டில் சமூகப்பதற்றத்தையும் அமைதியின்மையையும் உருவாக்கிட சதிசெய்யும் பா.ஜ.க.-சங்பரிவார் அரசின் பொது சிவில் சட்ட அறிவிப்பை எதிர்த்து முறியடிக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பகிரவும்...