Main Menu

பொங்கல் பண்டிகை : எடப்பாடி பழனிசாமியின் வாழ்த்து செய்தி!

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளையொட்டி தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் எனது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்ற மகாகவி பாரதியாரின் பாடலுக்கேற்ப, சிறப்புமிக்க வேளாண் தொழிலை மேம்படுத்திடவும், வேளாண் பெருமக்களின் நல்வாழ்விற்காகவும் தமிழ்நாடு அரசு, டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனைக் காத்திட தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம் 2020 இயற்றியது.

அதிமுக அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக உணவு தானியங்கள், பயறு வகைகள், சிறுதானியங்கள் மற்றும் எண்ணெய்வித்துக்கள் போன்ற இனங்களில் தமிழ்நாடு அதிக உற்பத்தி செய்து சாதனை படைத்ததற்காக மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு 5 முறை கிருஷி கர்மான் விருதினை வழங்கி கௌரவித்துள்ளது.

இந்த இனிய தைப் பொங்கல் திருநாளில் உழவு செழிக்கட்டும். உழவர்கள் மகிழட்டும். மக்கள் அனைவரின் வாழ்விலும் அன்பும் அமைதியும் நிலவட்டும்.  நாட்டில் நலமும் வளமும் பெருகட்டும் என்று வாழ்த்தி, மீண்டும் ஒருமுறை எனது பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...