Main Menu

புனர்வாழ்வுக்கு பின் விடுவிக்கப்பட்டவர் 4 மாதங்களில் மீண்டும் கைது – 8 ஆண்டுகளுக்கு பின் விடுவிப்பு

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர் மீண்டும் நான்கு மாதங்களில் கைது செய்யப்பட்டு, 8 வருடங்கள் சிறைச்சாலையில் தடுத்து வைத்திருக்கப்பட்ட நிலையில், சட்டமா அதிபரின் பணிப்புரைக்கு அமைய நேற்று (வியாழக்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு- உடையார் கட்டு பகுதியை சேர்ந்த நடேசு குகநாதன் என்பவரே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு 8 ஆம் மாதம் 24 ஆம் திகதி, பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, 21 மாதங்கள் பூசா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து விசாரணைகள் முடிவடைந்த பின்னர் கடந்த 2011ஆம் ஆண்டு மே மாதம் தொடக்கம் கொழும்பு அழுக்கடை நீதிமன்ற உத்தரவில் 10 மாதங்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

நீதிமன்ற வழக்கு விசாரணைகளின் பின்னர் கடந்த 2012.03.24 அன்று தொடக்கம் வவுனியா மருதமடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு வழங்கப்பட்டு, 2013.03.24 அன்று விடுவிக்கப்பட்டார்.

புனர்வாழ்வின் பின்னர் வீட்டில் வசித்து வந்த நிலையில் 2013.07.11 அன்று மீண்டும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக பூசா முகாம் மற்றும் ஆறாம் மாடி ஆகியவற்றில் 18 மாதங்கள் தடுத்து வைத்து விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த விசாரணைகளின் பின்னர் 2015.01.02 அன்று அழுத்கடை 8 இலக்க நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு, நியூமகசின் சிறைச்சாலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு  மேல் தடுத்து வைக்கப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் வழக்குகள் எதுவும் தாக்கல் செய்யப்படாமல் கைது செய்யப்பட்டு, 8 ஆண்டு கால பகுதிக்கு பின்னர் சட்டமா அதிபர் பணிப்புரைக்கு அமைவாக கொழும்பு நீதவான் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த நபரின் மனைவி, இவரின் விடுதலைக்காக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு 100க்கும் மேற்பட்ட கடிதங்களை அனுப்பிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...