Main Menu

பிரேஸில் வீரர் கேப்ரியல் ஜீசசுக்கு 2 மாதங்கள் கால்பந்து போட்டிகளில் விளையாட தடை!

பிரேஸில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கேப்ரியல் ஜீசசுக்கு 2 மாதங்கள், கால்பந்து போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மைதானத்தில் அத்துமீறி செயற்பட்ட காரணத்தினாலேயே, அவருக்கு தென்அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு இந்த தடையை விதித்துள்ளது.

பிரேஸிலில் கடந்த மாதம் நடந்த கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் இறுதி போட்டியில், பிரேஸில் அணி 3-1 என்ற கோல் கணக்கில் பெருவை வீழ்த்தி hம்பியன் பட்டம் வென்றது.

இப்போட்டியின் போது, 70ஆவது நிமிடத்தில் பிரேஸில் அணி வீரர் கேப்ரியல் ஜீசஸ் ஆக்ரோஷமாக விளையாடியதன் விளைவாக, அவருக்கு நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்த விரக்தியுடன் மைதானத்தை விட்டு வெளியேறிய கேப்ரியல் ஜீசஸ், போட்டி அதிகாரிகள் உட்கார அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக ‘டக்-அவுட்’ மற்றும் வீடியோ உதவி நடுவருக்காக வைக்கப்பட்டு இருக்கும் திரையை உதைத்து தள்ளினார்.

இதனால், கடும் விமர்சனத்திற்கு உள்ளான கேப்ரியல் ஜீசஸ், பிறகு நடந்த சம்பவத்துக்காக மன்னிப்பு கோரினார்.

எனினும், இந்த பிரச்சினை குறித்து விசாரணை நடத்திய தென்அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு, கேப்ரியல் ஜீசஸ்க்கு சர்வதேச போட்டிகளில் 2 மாதம் விளையாட தடை விதித்ததோடு, 30,000 அமெரிக்க டொலர்கள் அபராதமும் விதித்தது.

மேலும் ஒழுங்கு விதிமுறையை மீறியதாக பிரேஸில் கால்பந்து கூட்டமைப்புக்கு 15,000 அமெரிக்க டொலர்கள் அபராதமாகவும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை மேன்முறையீடு செய்ய கேப்ரியல் ஜீசஸ்க்கு, ஒரு வாரம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், தேசிய அணியுடன் உத்தியோகபூர்வ மற்றும் நட்புரீதியான போட்டிகளில் விளையாடும் வாய்ப்பினை, 22 வயதான கேப்ரியல் ஜீசஸ் இழக்கிறார்.

பகிரவும்...