Main Menu

பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கார்த்திகைப்பூ விவகாரம்: சாரா ஹல்டனை சந்திக்கிறார் வெளிவிவகார அமைச்சர்

பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழீழத்தின் தேசிய அடையாளமாக கருதப்படும் கார்த்திகைப் பூ ஒளிரவிடப்பட்டமை குறித்து அரசாங்கம் தனது அதிருப்தியை தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உலகமெங்கும் பரந்து வாழ்கின்ற தமிழர்கள் நவம்பர் 27ஆம் திகதியன்று மாவீரர்களை நினைவு கூர்வது வழமையாகும். இந்நிலையில் குறித்த நாளில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக கார்த்திகை பூ, பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் ஒளிரவிடப்பட்டது.

இந்நிலையில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டனை நாளை அமைச்சில் சந்தித்து குறித்த விடயம் தொடர்பாக பேசுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

போரின்போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்ந்து நல்லிணக்கத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கோடு இலங்கை தொடர்பான யு.என்.எச்.ஆர்.சி தீர்மானத்தை ஆதரித்த ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட கோர் குழுவில் பிரித்தானியாவும் அடங்குகின்றது.

கனடா, ஜேர்மனி, வடக்கு மசிடோனியா மற்றும் மாண்டினீக்ரோ ஆகியவை இந்த குழுவில் உள்ள மற்ற நாடுகளாகும்.

ஆனால் புதிதாக ஆட்சியைக் கைப்பற்றிய தற்போதைய அரசாங்கம், இலங்கைக்கு எதிராகவும் சர்வதேசத்திடம் இராணுவத்தை காட்டிக்கொடுப்பதற்காகவும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்து இணை அனுசரணையிலிருந்து விலகியது.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் உரையாற்றிய மனித உரிமைகளுக்கான பிரித்தானியாவின் சர்வதேச தூதர் ரீட்டா பிரஞ்ச், இணை அனுசரணையிலிருந்து விலகுவது குறித்து கவலை தெரிவித்தார்.

தீர்மானத்திற்கான அணுகுமுறையை இலங்கை அரசாங்கம் மாற்றியமைத்ததில் நாங்கள் மிகுந்த ஏமாற்றமும் கவலையும் அடைகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாங்கள் தீர்மானம் 30/1 மற்றும் அதன் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம் என்றும் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

பகிரவும்...