Main Menu

பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: நான்காவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகள்

ஆண்டின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது.

செம்மண் தரையில் நடைபெறும் சிறப்பு மிக்க இத்தொடரில், தற்போது இரண்டாவது சுற்றுப் போட்டிகள் நடைபெறுகின்றன.

இதில் நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியொன்றில், ஸ்பெயினின் ரபேல் நடால், இத்தாலியின் ஜென்னிக் சின்னரை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ரபேல் நடால், 7-5, 6-3, 6-0 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.


இன்னொரு ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியொன்றில், உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இத்தாலியின் லோரென்சோ முசெட்டியுடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதலிரண்டு செட்டுகளை 7-6, 7-6 என லோரென்சோ முசெட்டி கைப்பற்ற, அடுத்த இரண்டு செட்டுகளையும் 6-1, 6-0 என ஜோகோவிச் கைப்பற்றினார்.

இதனைத்தொடர்ந்து வெற்றியை தீர்மானிக்கும் நான்காவது செட்டில், 4-0 என்ற கணக்கில் ஜோகோவிச் முன்னிலைப் பெற்றிருந்த போது முசெட்டி போட்டியின் இடைநடுவே உபாதைக் காரணமாக வெளியேறினார். இதனால் வெற்றியாளரான ஜோகோவிச் காலிறுதிக்குள் நுழைந்தார்.


மற்றொரு ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியொன்றில், ஜேர்மனியின் அலெக்ஸண்டர் ஸ்வெரவ்வும், ஜப்பானின் கெய் நிஷிகோரியும் பலப்பரீட்சை நடத்தினர்.

எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், அலெக்ஸண்டர் ஸ்வெரவ் 6-4, 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.


இதேபோல பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியொன்றில், அமெரிக்காவின் சோபியா கெனின், கிரேக்கத்தின் மரியா சக்கரியை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் மரியா சக்கரி வெற்றிபெற்று காலிறுதிக்கு தகுதிபெற்றார்.


இன்னொரு பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியொன்றில், அமெரிக்காவின் இளம் வீராங்கனை கோகோ கோஃப், துனிசியாவின் ஒன்ஸ் ஜாபூருடன் மோதினார்.

இப்போட்டியில் கோகோ கோஃப், 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்குகளில் எளிதாக வெற்றிபெற்று காலிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.

பகிரவும்...