Main Menu

பிரதமர் மோடியுடன் மைக்ரோ சாப்ட் அதிபர் பில் கேட்ஸ் சந்திப்பு

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிபரும் பிரபல கொடையாளருமான பில் கேட்ஸ் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

பிரபல மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் தலைவரான பில் கேட்ஸ் தனது வருமானத்தின் ஒரு பகுதியை உலகளாவிய அளவில் வறுமை ஒழிப்பு, நோய் ஒழிப்பு தொடர்பான நற்பணிகளுக்கு நன்கொடையாக அளித்து வருகிறார்.

இதற்காக உருவாக்கப்பட்ட பில் (மற்றும்) மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில், உலகநாடுகளில் போலியோவை ஒழிக்க கடந்த ஆண்டுகளில் சுமார் 200 கோடி அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது. அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக 28 பில்லியன் அமெரிக்க டாலர்களும், உலக சுகாதார மேம்பாட்டுக்காக 8 பில்லியன் அமெரிக்க டாலர்களும் வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர, இந்தியாவின் சில மாநிலங்களில் சுகாதாரம், விவசாயம், கிராமப்புற மேம்பாடு ஆகிய துறைசார்ந்த அபிவிருத்தி நடவடிக்கைகளில் பில் (மற்றும்) மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஈடுபாடு காட்டி வருகிறது.

பில் கேட்ஸ் - மோடி ஆலோசனை

மேலும், இந்தியாவின் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் கல்வி, குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாடு வளர்ச்சியடையும் நோக்கத்தில் தங்களது தொண்டு நிறுவனத்தின் சார்பில் பல திட்டங்களையும் பில் கேட்ஸ் செயல்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், இந்தியா வந்துள்ள பில் கேட்ஸ் இன்று மாலை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்தியாவில் தங்களது தொண்டு நிறுவனத்தின் சார்பில் நிறைவேற்றப்படும் நற்பணிகள் தொடர்பாக பிரதமரிடம் பில் கேட்ஸ் விளக்கிக் கூறினார்.

பின்னர், மத்திய வேளாண்மைத்துறை அமைச்சகம் சார்பில் நவீனக்கால வேளாண்மை செயல்திட்டம் தொடர்பாக நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் அவர் பங்கேற்று உரையாற்றினார்.

பகிரவும்...