Main Menu

பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 20 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான் நாட்டின் தெற்கு பகுதியில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் இடிந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


பாகிஸ்தான் நாட்டின் தெற்கு பகுதியில் பலுசிஸ்தான் மாகாணம் உள்ளது. இதன் தலைநகரம் குயட்டாவில் இருந்து 100 கி.மீ. தூரத்தில் ஹர்னாய் என்ற நகரம் உள்ளது. இங்கு இன்று அதிகாலை 3.20 மணிக்கு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹர்னாயில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் இதன் மையப்புள்ளி இருந்தது. ரிக்டர் அளவில் 5.9 ஆக நிலநடுக்கம் பதிவானது.
இதனால் ஹர்னாய், தலைநகரம் குயட்டா, சிபி, பிசைன், குய்லா சாய்புல்லா, ஜமான், ஷியார், ஷாப் உள்ளிட்ட பகுதிகள் பயங்கரமாக குலுங்கியது. இதில் வீடுகளும், கட்டிடங்களும் இடிந்து விழுந்தன. இந்த பகுதியில் பெரும்பாலும் மண்ணால் வீடுகள் கட்டப்பட்டு இருந்தன. நிலநடுக்கத்தின் அதிர்வுகளை தாங்க முடியாமல் அவை இடிந்து விழுந்தன.
அதிகாலை நேரம் என்பதால் பெரும்பாலான மக்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் மீது இடிபாடுகள் விழுந்தன. அவற்றில் சிக்கி பலரும் உயிரிழந்தார்கள். ஏராளமானோர் காயம் அடைந்தனர். இதுவரை வந்துள்ள தகவல்களின்படி 20 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், 300 பேர் காயமடைந்து இருப்பதாகவும் பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளிலேயே சிகிச்சை அளிக்க டாக்டர்கள் குழுக்களும் அனுப்பப்பட்டு உள்ளன. அனைத்து பகுதிகளிலும் மீட்புப்பணிகள் முடிந்த பிறகுதான் உயிரிழப்புகள் பற்றிய முழுமையான தகவல்கள் தெரியவரும்’’ என்று கூறினார்.
இதுவரை இறந்திருப்பவர்களில் பெண்கள், குழந்தைகளே அதிகமாக உள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்டதற்கு பிறகு பொது மக்கள் வீட்டை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தார்கள். நிலநடுக்கம் ஏற்பட்டதற்கு பிறகு தொடர்ந்து அதிர்வுகள் ஏற்பட்டு கொண்டே இருந்தன. இதனால் மக்கள் கடும் பீதி அடைந்தார்கள்.
பாகிஸ்தானில் 2019-ம் ஆண்டு ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள மிர்புர் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது 30 பேர் பலியானார்கள். 2015-ம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் அதை ஒட்டியுள்ள ஆப்கானிஸ்தான் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 400 பேர் பலியானார்கள்.
அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்றாக உள்ளது. அங்கு வருடந்தோறும் பல நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. ஒரு சில மட்டும் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் இந்த நிலநடுக்கமும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பகிரவும்...