Main Menu

பயங்கரவாத எதிர்ப்பு விதிமுறைகள் நல்லிணக்கத்தை முன்னெடுக்காது – மிச்சேல் பெச்சலட்

பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்து 300 க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் முஸ்லீம் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்களை தடைசெய்வது உள்ளிட்ட சமீபத்திய பயங்கரவாத எதிர்ப்பு விதிமுறைகள் நல்லிணக்கத்தை முன்னெடுக்காது என ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் விசாரணையின்றி, இரண்டு ஆண்டுகள் வரை மக்களை தன்னிச்சையாக தடுத்து வைக்க பயங்கரவாத எதிர்ப்பு விதிமுறைகள் அனுமதிப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 47 வது அமர்வின் ஆரம்ப நிகழ்வின் போதே ஆணையாளர் மிச்சேல் பெச்சலட் இதனைத் தெரிவித்தார்.

மேலும் இலங்கையின் காணாமற்போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகத்திற்கான புதிய நியமனங்கள் குறித்தும் மிச்சேல் பெச்சலட் கவலை வெளியிட்டார்.

இலங்கையில், முஸ்லிம்களை குறிவைப்பதாக கருதப்படும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மற்றும் தமிழர்களின் மீதான துன்புறுத்தல் தொடர்பாக தாம் கவலையடைவதாகவும் போரில் இறந்தவர்களை நினைவுக்கூறும் நிகழ்வுகளின் போது இடம்பெறும் உரிமை மீறல்கள் குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.

காணாமற்போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகத்திற்கான புதிய நியமனங்கள், கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில், பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையை மேலும் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதக்கவும் குறிப்பிட்டார்.

எனவே பொறுப்புக்கூறல் தொடர்பான ஆணையை செயற்படுத்துவதில் உள்ள முன்னேற்றம் உட்பட செப்டம்பர் மாதம் இடம்பெறும் அமர்வில் இந்த பிரச்சினைகள் தொடர்பாகவும் எடுத்துரைக்கப்படும் என்றும் மிச்சேல் பெச்சலட் தெரிவித்தார்.

பகிரவும்...