Main Menu

தமிழ் மாற்று அணி உருவாக்கம் – அவசியமில்லை எங்களுடன் இணையுங்கள் – கூட்டமைப்பு

தமிழ் கட்சிகளில் மாற்று அணிகள் உருவாக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் மாற்று அணியொன்றை உருவாக்கி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த விடயம் குறித்து ஆதவனுக்குக் கருத்துத் தெரிவித்த தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் அருந்தவபாலன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் தமிழ் மக்களை தவறான பாதைக்கு கொண்டு சென்றதன் விளைவாகவே புதிய தமிழ் கட்சியொன்றை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டதாக குறிப்பிட்டார்.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே சுமந்திரன் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “மாற்று அணிகள் உருவாக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். அதற்கான அவசியம் தற்போது இல்லை.

தங்களின் பலம் என்னவென்று அறிவதற்கான நேரம் இதுவல்ல. எதிர்வரும் தேர்தலில் அவ்வாறான பரீட்சார்த்த வேளைகளை செய்து மக்களை குழப்ப வேண்டாமென கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து எவரையும் வெளியில் செல்லுமாறு கூறவில்லை. எனவே அனைத்து தமிழ் தரப்பினரையும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்துகொள்ளுமாறு நான் அழைப்பு விடுக்கிறேன்” என மேலும் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...