Main Menu

தமிழர்களின் காணிகளை அபகரிக்கவே யாழில் இருந்து இரவோடு இரவாக ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டன- சுமந்திரன்

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆவணங்கள், யாழ்ப்பாணத்திலிருந்து வெளியே கொண்டு செல்லப்படுகின்றமையை, அரசாங்கம் தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பதன் ஒரு கட்டமாகவே தாங்கள் பார்க்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே எம்.ஏ.சுமந்திரன்  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இளந்தலைவர்களை சந்திப்பதற்கு இந்திய தூதுவர் அதிக ஆர்வம் காட்டியமையினால் உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், இளையவர்கள், பெண் உறுப்பினர் உள்ளிட்ட அனைவரும் 1 மணிநேரம் உரையாடுவதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டோம்.

இதன்போது இளந்தலைவர்கள் அரசியல் நிலைப்பாடு, தற்போது தமிழ் மக்களிடத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள சில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மற்றும் அபிவிருத்தி விடயங்கள் தொடர்பாக தெரியப்படுத்தினர்.

இதனை செவிமடுத்த இந்திய தூதுவர், அவ்விடயம் தொடர்பாக அவரது நிலைப்பாட்டினை தெரிவித்தார்.

அரசியல் நிலைப்பாட்டில், வழமையான நிலைப்பாட்டினையே இந்தியா கொண்டுள்ளதாகவும் அபிவிருத்தி விடயத்தில் பங்களிப்பினை வழங்குவதிலும் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும்,13 திருத்தத்தில் காணப்படுகின்ற பொலிஸ் காணி அதிகாரங்களை உடனடியாக அமுல்ப்படுத்தினால் சில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தடுக்க முடியுமென எமது தரப்பினர், தூதுவரிடம் தெரியப்படுத்தினர்.

இதேவேளை, மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்படுவது, பெரும்பான்மை மக்களிடத்தில் தேவையில்லை என்ற கருத்தை பதிவு செய்வதற்கான  அரசாங்கத்தின் சூழ்ச்சியாகவே கருதுகின்றோம்.

ஆகவே, அத்தகைய நிலையேற்படாமல் தடுப்பதற்கு உடனடியாக மாகாண சபைத் தேரர்தலினை நடத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதேவேளை சர்வதேச நீதிமன்ற பொறிமுறை அவசியம் என்பதை வெளிப்படுத்தி இருந்தோம். பொறுப்புக்கூறல் விடயம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இருந்து வெளியே கொண்டுவர  வேண்டும்.

மேலும் சர்வதேச நீதிமன்றத்தில் அதனைப் பாரப்படுத்துவதற்கு ஏதுவாக செயலாளர் நாயகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதைதான் எங்களது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளோம்.

இந்த சபை சர்வதேச  நீதிமன்றத்தில்  எதனையும் பாரப்படுத்த முடியாது. ஐக்கிய நாடுகள் அமைப்பில் ஒவ்வொரு சபைக்கும் சில சில அதிகாரங்கள் இருக்கின்றன.

இந்த மனித உரிமை பேரவைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை பாரப்படுத்தும் அதிகாரம் கிடையாது. அந்த அதிகாரம் பாதுகாப்பு சபையிடம் மாத்திரம்தான் இருக்கின்றது.

இதனை பல தடவை மக்களிடம் தெளிவுப்படுத்தினோம். நாங்கள் கூறியது பொறுப்புக்கூறல் விடயத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இருந்து வெளியே கொண்டு வாருங்கள்.

செயலாளர் நாயகத்தின் ஊடாக பாதுகாப்பு சபைக்கு கொண்டுச் சென்று, பொதுச்சபை, பாதுகாப்புச் சபை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறே கூறி இருக்கின்றோம்

மேலும் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வரைபில் நாங்கள் கேட்டுக்கொண்ட விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. பொறுப்புக்கூறல் இந்த பேரவையில் இருந்து வெளியே கொண்டு வரும் விடயம் தெட்ட தெளிவாக இருக்கின்றது.

இதேவேளை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆவணங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியே கொண்டுசெல்லப்படுகின்றமையை, அரசாங்கம் தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பதன் ஒரு கட்டமாகவே தாங்கள் பார்க்கின்றோம்.

ஆவணங்களை அனுராதபுரத்தில் வைத்துவிட்டு, தமிழ் மக்கள் தங்களின் தாயகம் என்று கூறும் நிலத்தை என்னவிதமாக அபகரிக்கலாம் என்ற திட்டங்களை வகுப்பதற்காகத்தான் குறித்த ஆவணங்கள் இரவோடிரவாக மாற்றப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...