Main Menu

செஞ்சோலை படுகொலை தினத்தின் 14ஆம் ஆண்டு நினைவு

மனது மறக்காத துயரச் சம்பவமான செஞ்சோலை படுகொலை சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

யுத்தம் நிறைவடைந்து 11 வருடங்கள் கடந்த போதிலும் செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தற்போதும் நெஞ்சை உருக்கும் நிகழ்வாக மக்களின் மனங்களில் ஆழப் பதிந்திருக்கின்றன.

கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14ஆம் திகதி இதேபோன்றதொரு நாளில், முல்லைத்தீவு மாவட்டத்தில் வள்ளிபுனம் பகுதியில் உள்ள செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகம் மீது இலங்கை விமானப் படை நடத்திய தாக்குதலில் பாடசாலை மாணவிகள் உயிரிழந்தனர். அத்துடன், 129இற்கும் அதிகமான மாணவிகள் அவயங்களை இழக்கச் செய்தது.

அன்றைய தினம் கொல்லப்பட்டவர்களில் சிலரது உடல்கள் சிதறியபடி ஆங்காங்கே காணப்பட்டன. காயமடைந்தவர்களில் பலர் அவயவங்களை இழந்தனர்.

காயமடைந்தவர்கள் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, தர்மபுரம், கிளிநொச்சி ஆகிய பொது வைத்தியசாலைகளிலும் தனியார் வைத்தியசாலைகளிலும் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர்.

தமது பிள்ளைகள் தங்கியிருந்த பகுதி மீது குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றதை அறிந்த பெற்றோர், சொல்லொனாத் துயரத்துடன் செஞ்சோலை வளாகத்தை சூழ்ந்திருந்தனர்.

கொல்லப்பட்டவர்களில் தமது பிள்ளைகளும் உள்ளனரா என்ற ஏக்கத்துடன் இறந்து கிடந்த மாணவிகளைத் தேடிய குடும்பத்தினர் கொல்லப்பட்டவர்கள் தமது பிள்ளைகள்தான் எனத் தெரிந்ததும் கதறிய கதறல்கள் எழுத்திலடங்காதவை.

இந்தச் சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 14 வருடங்கள் ஆகிவிட்டபோதிலும் அன்றைய தாக்குதல்கள் மனக்கண் முன்னே தற்போதும் ஆறாத சுவடுகளாய் பதிந்துள்ளன.

எனினும், அன்று பாதிக்கப்பட்டவர்கள், அவயங்களை இழந்தவர்களின் நிலைமை தற்போதும் கேள்விக்குறியாகவே உள்ளதென்பது மறுக்கப்பட முடியாத உண்மை.

பகிரவும்...