Main Menu

சுய நலனுக்காக பொய்யாக நாட்டையும், இராணுவத்தையும் காட்டிக் கொடுக்கும் கோத்தாபய – ஆசுமாரசிங்க

தனது நலனுக்காக பொய்யாக நாட்டையும், இராணுவத்தையும் காட்டிக்கொடுக்கும் விதமாக கோத்தாபய ராஜபக்ஷ செயற்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில் அமெரிக்காவின் கலிபோர்னிய நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அந்தக்கொலை அரசாங்கத்தினாலும் இராணுவத்தினாலும் நடத்தப்பட்டது என்ற அடிப்படையில் கோத்தாபயவின் சட்டத்தரணிகள் வாதிட்டிருக்கின்றார்கள். 

எனவே இராஜதந்திரக் காரணங்களினால் இவ்வழக்கைத் தள்ளுபடி செய்வதாக அந்நீதிமன்றம் அறிவித்திருக்கிறதே தவிர, அதனூடாக கோத்தாபய ராஜபக்ஷ நிரபராதி என்ற முடிவிற்கு வரமுடியாது. இதனூடாக கோத்தாபய ராஜபக்ஷ அவருடைய சகோதரைக் காட்டிக்கொடுக்கின்றார். 

ஏனெனில் அப்போது நாட்டின் ஜனாதிபதியாக மஹிந்தவே பதவி வகித்தார். எனவே லசந்தவின் படுகொலை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டது என்று கோத்தாபய கலிபோர்னிய நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளமை முக்கியமானது. 

இதனூடாக மீண்டும் சர்வதேச சமூகம் தலையிட்டு விசாரணை நடத்தவேண்டும் என்று கோரும் நிலை உருவாகும். இதுவே தமது நலனுக்கான நாட்டைக் காட்டிக்கொடுப்பதாகும். 

மேலும் கோதபாய ராஜபக்ஷ கடந்த 2005 ஆம் ஆண்டில் பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அப்போதிலிருந்து அவருடைய சொத்து மற்றும் பொறுப்பு விபரங்கள் எவையும் சமர்ப்பிக்கப்படவில்லை. 

அதுமாத்திரமன்றி அவருடைய விபரங்கள் தொடர்பான எந்தவொரு கோப்பையும் இன்றைய திகதியில் கண்டுபிடிக்க முடியவில்லை. அனைத்தும் காணாமல் போயிருக்கின்றன. வெள்ளை வான் மூலம் நபர்களை காணாமலாக்கியது மாத்திரமன்றி, தனது இராஜதந்திர சேவையின் விபரங்களையும் காணாமல்போகச் செய்திருக்கும் ஒருவரே தற்போது ஜனாதிபதி வோட்பாளராகக் களமிறங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

பகிரவும்...