Main Menu

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டார் ஜனாதிபதி

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் தொடர்பில் அவதானிப்பதற்காக ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ இன்று அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தின் சில பிரதேசங்களுக்கு கண்காணிப்பு விஜயமொன்றினை மேற்கொண்டார்.

இதன்போது அனுராதபுரத்திலுள்ள ஜனாதிபதி மாளிகையில் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகளை சந்தித்த ஜனாதிபதி , நிவாரண நடவடிக்கைகள் தொடர்பில் கேட்டறிந்தார். .

இவ்விஜயம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : 

இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான நலன்பேணல் நடவடிக்கைகளை துரிதமாகவும் தொடர்ச்சியாகவும் முன்னெடுத்துச் செல்லுமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். 

இந்த நிவாரண நடவடிக்கைகள் இரண்டு கட்டமாக முன்னெடுக்கப்படுகின்றது. அனர்த்தத்தின்போது வழங்கப்பட வேண்டிய நிவாரணங்கள் மற்றும் அனர்த்தத்தின் பின்னர் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் அதில் உள்ளடங்குகின்றன. இந்த இரண்டு செயற்பாடுகள் தொடர்பிலும் அரசாங்கம் மிகுந்த பொறுப்புடன் செயற்படுகின்றது.

அனுராதபுரம் மாவட்டத்தின் 22 பிரதேச செயலக பிரிவுகளில் 10 பிரிவுகள் அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ள அதேவேளை கடந்த 20 ஆம் திகதி முதல் நேற்று திங்கட்கிழமை வரை 1561 குடும்பங்களைச் சேர்ந்த 5181 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் 937 குடும்பங்களை சேர்ந்த 2923 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான சமைத்த உணவுகள் மற்றும் உலர் உணவு பொருட்கள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன. 

வீடுகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பில் கண்டறிந்து உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார். அனர்த்த நிலைமை குறைவடைந்துள்ள பிரதேசங்களில் சுத்தம் செய்யும் செயற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மக்களுக்கான சுகாதார வசதிகள் குறித்து கண்டறிவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

சேதமடைந்துள்ள குளங்களின் மறுசீரமைப்பு, பெருந்தெருக்கள், கால்வாய்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை துரிதமாக இயல்புநிலைக்கு கொண்டு வருதல் ஆகியன தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. மேலும் பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு தொடர்பில் கண்டறிந்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி  பணிப்புரை வழங்கினார். 

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள மத்திய நிலையங்கள் சிலவற்றிற்கும் ஜனாதிபதி விஜயம் செய்து மக்களை சந்தித்தார். இராஜாங்கனை துட்டுகெமுனு விகாரையிலும், போதிராஜராம விகாரையிலும் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களை சந்தித்து அவர்களது நலன்புரி தேவைகளை ஜனாதிபதி கேட்டறிந்து கொண்டார். 

திடீர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பொலன்னறுவை மாவட்ட மக்களுக்காக முன்னெடுக்கப்படும் நிவாரண வேலைத்திட்டங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கண்டறிவதற்கான கலந்துரையாடலொன்றும் நேற்று பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.

பகிரவும்...