Main Menu

சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து மொஹமட் ஆமிர் ஓய்வு!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மொஹமட் ஆமிர், சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.

27 வயதான மொஹமட் ஆமிரின் இந்த தீடிர் ஓய்வு அறிவிப்பானது கிரிக்கெட் இரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இன்னமும் ஒரிரு வருடங்கள் அவர் பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்காக விளையாடியிருக்கலாம் என பல இரசிகர்களும் சமூகவலை தளங்களில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருவதோடு, அவர் இவ்வளவு காலமும் இரசிகர்களை மகிழ்வித்ததற்காக வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.

தனது 17 வயதில் 2009ஆம் ஆண்டு இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான மொஹமட் ஆமிர், தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவுக்கு கொண்டு வரும்வரை எதிர்கொண்ட பிரச்சினைகள் ஏராளம்.

2010ஆம் ஆண்டில் இங்கிலாந்துக் கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி, மாபெரும் நெருக்கடியைச் சந்தித்திருந்தது. அவ்வணியின் தலைவர் சல்மான் பட், முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஆசிப், வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஆமிர் ஆகியோர், ஸ்பொட் பிக்சிங்கில் ஈடுபட்டமை, வெளிப்படுத்தப்பட்டது.

கிரிக்கெட் உலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம், கிரிக்கெட்டின் தாயகம் என அழைக்கப்படும் இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்றிருந்தது.

இதனையடுத்து மொஹமட் ஆமிர், 5 ஆண்டுகள் போட்டித் தடைக்குள்ளாகியும், சிறைத் தண்டனைக்கு உள்ளாகியும், 6 ஆண்டுகளின் பின்னர், அதே மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் தனது மீள் வருகையை நிருபித்தார்.

இதன்பிறகு தனது மிரட்டல் பந்து வீச்சு மூலம் அனைவரினதும் கவனத்தை ஈர்த்த அவர், அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக மாறினார்.

இதில் அவர் பங்காற்றிய முக்கிய போட்டிகளில், கடந்த 2017ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரும் ஒன்றாகும்.

இதில் பாகிஸ்தான் அணி சம்பியன் பட்டத்தை வெல்வதற்கு காரணமான முக்கிய வீரர்களில் ஆமிரும் ஒருவர் என்றால் அது மிகையாகாது.

எனினும், பாகிஸ்தான் உலகக் கிண்ண ஆரம்ப அணியில் வேகப் பந்துவீச்சாளர் மொஹமட் ஆமிர் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக இடதுகை வேகப் பந்துவீச்சாளர் ஜுனைத் கான் இணைத்துக் கொள்ளப்பட்டார்.

இதற்கு அவரது அண்மைக்கால பெறுபேறுகள், உடற்தகுதியில் தோல்வியடைந்தமை என பல காரணங்கள் முன்னிறுத்தப்பட்டன.

ஆனால் அவர் அணியில் இணைத்துக் கொள்ளப்படாதது குறித்து பலரும் தங்களது கண்டனங்களை வெளியிட்டனர்.

இதனால், உலகக்கிண்ண தொடருக்கு முன்னர், இங்கிலாந்து அணியுடனான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆமிருக்கு தனது திறமையை காண்பித்து உலகக் கிண்ண பாகிஸ்தான் அணியில் இடம்பெறுவதற்கான இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டது.

அதில் அவர் தனது ஓரளவு திறமையை காண்பித்தும், அப்போது தேர்வுக் குழு தலைவராக இருந்த இன்சமாம் உல் ஹக் தலையீட்டின் மூலமும், மீண்டும் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டார்.

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில், 8 போட்டிகளில் விளையாடிய மொஹமட் ஆமிர், 17 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் எட்டாவது இடத்தை பிடித்தார்.

இவ்வாறு சிறப்பாக பந்து வீசி வந்த நிலையிலேயே மொஹமட் ஆமிர், இந்த ஓய்வு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

எனினும், அவர் ஒருநாள் மற்றும் ரி-20 போட்டிகளில் மட்டும் தொடர்ந்து விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2009ஆம் ஆண்டு இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில், அறிமுகமான மொஹமட் ஆமிர் இதுவரை 36 போட்டிகளில் விளையாடி 119 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அதேபோல 2009ஆம் ஆண்டு இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான அவர், இதுவரை 59 போட்டிகளில் விளையாடி 77 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

2009ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிரான ரி-20 போட்டியில் அறிமுகமான மொஹமட் ஆமிர், இதுவரை 42 போட்டிகளில் விளையாடி 55 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதுதவிர அவர் பல சாதனைகளையும் படைத்துள்ளார். பாகிஸ்தான் அணிக்காக குறைந்தளவு முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் 200 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய 2ஆவது வீரர் என்ற மைல்கல்லை எட்டியதுடன், முதல்தரப் போட்டியொன்றில் 2ஆவது தடவையாக 10 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி சாதனை படைத்த வீரராக இவர் திகழ்கின்றார்.

அவர் கடந்த 2009ஆம் ஆண்டு லாஹுர் அணிக்கெதிரான உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் தேசிய வங்கி அணிக்காக விளையாடி 97 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதுஎவ்வாறாயினும், மொஹமட் ஆமிரின் எதிர்கால திட்டங்களும், கனவுகளும் சிறப்பாக நிறைவேற வேண்டுமென ஆதவன் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

பகிரவும்...