Main Menu

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் அறிவிப்புக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ள விளையாட்டு வீரர்கள் எதிர்ப்பு!

டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் தொடர் விவகாரத்தில் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் முடிவுக்கு எதிராக, ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ள விளையாட்டு வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்குமாறு உலகநாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

எனினும், நடப்பு ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைப்பது தொடர்பாக தற்போதைக்கு எந்த திட்டமும் இல்லை என சர்வதேச ஒலிம்பிக் குழு திட்டவட்டமாக கூறியுள்ளது.

இந்த நிலையில் கிரேக்க தடகள வீராங்கனை கதரீனா ஸ்டெஃபானிடி, பிரான்ஸைச் சேர்ந்த 110 மீ தடைதாண்டும் வீரரான பாஸ்கல் மார்டினோட் லகார்ட்  போன்ற வீரர்கள் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கதரீனா ஸ்டெஃபானிடி தனது சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘சர்வதேச ஒலிம்பிக் குழு வீரர்களின் உடல்நலத்தில் அக்கறை செலுத்த மறுக்கிறது. குழுப் போட்டிகளில் பல நாடுகளைச் சேர்ந்த வீரர்களும், வீராங்கனைகளும் ஒன்றாக பங்கேற்க வேண்டியிருக்கும்.

ஜிம்னாஸ்டிக்ஸ் போன்ற விளையாட்டுகளில் பலர் தொடக் கூடிய பொருள்களை தொட வேண்டியதிருக்கும். இதை ஒலிம்பிக் குழு கவனத்தில் கொள்ள வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல, பாஸ்கல் மார்டினோட் லகார்ட் கூறுகையில், ‘ஒலிம்பிக் போட்டியை ஒத்திவைப்பதே சிறந்த முடிவாக இருக்கும். ஒரு சில நாடுகள் கரோனா வைரஸால் அதிகமாகவும், ஒரு சில நாடுகள் குறைவாகவும் பாதிக்கப்பட்டுள்ள. சில நாடுகளில் பயிற்சி எடுக்க மைதானங்கள் கிடைப்பதில்லை. அனைத்தும் மூடப்பட்டுவிட்டன. ஆண்டு இறுதி வரை ஒலிம்பிக் ஒத்திவைக்கப்பட்டால் நல்லது’ என கூறியுள்ளார்.

இதனிடையே, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எழுந்துள்ள அசாதாரணமான சூழலில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான தீர்வைக் காண வேண்டிய நிலையில் இருக்கிறோம் என்று சர்வதேச ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சர்வதேச ஒலிம்பிக் குழு செய்தித்தொடர்பாளர் கூறுகையில், ‘போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் உடல்நலத்தில் அக்கறை கொண்டிருக்கிறோம். அதேநேரம், ஒலிம்பிக் போட்டியையும் திட்டமிட்டபடி நடத்த வேண்டிய சூழலில் உள்ளோம்’ என கூறினார்.
………….

உலகின் மிகப் பெரிய விளையாட்டு தொடரான ஒலிம்பிக் தொடரை நடத்துவதற்கு ஜப்பான் கடந்த இரண்டு வருடங்களாக, பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

குறிப்பாக அரசின் பெருமளவான நிதியினால் கடந்த இரண்டு வருடங்களாக உருவாக்கப்பட்டு வந்த பிரமாண்ட விளையாட்டு அரங்குகள் தற்போது போட்டிகளை நடத்த தயாராகவுள்ளது.

குறித்த கோடைக்கால ஒலிம்பிக் தொடரில், வெப்பத்தை கட்டுப்படுத்தும் வகையில் அரங்கத்தின் கூரைகள் மரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பார்வையாளர்கள் மற்றும் வீரர்களை குளிர்சியாக வைத்திருக்க முடியுமென வடிவமைப்பாளர்கள் நம்புகின்றனர்.

குறித்த கோடைக்கால ஒலிப்பிக் தொடரில், பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, முகத்தின் மூலம் ஒருவரை அடையாளம் காணும் முறைமையை போட்டி அமைப்பாளர்கள் அறிமுகப்படுத்தவுள்ளனர்.

கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள், எதிர்வரும் ஜூலை மாதம் 24ஆம் திகதி முதல் ஒகஸ்ட் மாதம் 9ஆம் திகதி வரை, ஜப்பானின் டோக்கியோவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

206 நாடுகள் பங்கேற்கும் இத்தொடரில், 33 விளையாட்டுகளில் இருந்து 339 விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த தொடரில் 11,091 போட்டியாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்தோடு, இந்த ஒலிம்பிக் போட்டிகளில், பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், கோடைக்கால ஒலிம்பிக் தொடரில், 7 புதிய விளையாட்டுக்கள் அறிமுகப்படுத்தவுள்ளன. இதனை சர்வதேச ஒலிம்பிக் குழுவும் உறுதிப்படுத்தியுள்ளது.

அதேபோல, கோடைகால பரா ஒலிம்பிக் போட்டிகள், எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 25ஆம் திகதி முதல் எதிர்வரும் செப்டம்பர் 6ஆம் திகதி வரை டோக்கியோவில் நடைபெறவுள்ளது

டோக்கியோவில் உள்ள புதிய தேசிய விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இந்த போட்டித் தொடரில், 22 விளையாட்டுக்களில் இருந்து 540 பிரிவுகளில் விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.

பகிரவும்...