Main Menu

கொவிட்-19 தொற்று தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க பிரான்ஸ் 200 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கீடு!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கவும் அதனை உற்பத்தி செய்யவும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் 200 மில்லியன் யூரோக்களை ஒதுக்கியுள்ளார்.

பிரான்ஸின் முக்கிய மருத்துவ ஆய்வுகூடமாகிய சனோஃபிக்கு (Sanofi) விஜயம் மேற்கொண்டு அங்கிருந்த அதிகாரிகளிடம் உரையாடிய பின்னர், அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

லியோன் நகரில் அமைந்துள்ள இந்த ஆய்வுகூடமானது உலகில் மிகப்பெரிய தடுப்பு மருந்து ஆய்வுகூடமாகும். 20 வகையான கொடிய நோய்களுக்கான தடுப்பு மருந்து இங்கே உற்பத்தியாகிறது.

கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க 600 மில்லியன் யூரோக்கள் தேவைப்படுகிறது என்று நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. அதில் 200 மில்லியன் யூரோக்களை அரசு சார்பில் ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலக நாடுகள் முழு வீச்சுடன் களமிறங்கியுள்ளன.

இந்தநிலையில் சோதனை நடவடிக்கையில் ஜேர்மனி, அமெரிக்கா, இஸ்ரேல், பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் தீவிர ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.

முன்னதாக, ஐரோப்பிய ஒன்றியத்தால் இணையத்தில் கூட்டப்பட்ட கூட்டத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று தடுப்பு மருந்துக்கான ஆராய்ச்சிக்காக, பிரான்ஸ் 500 மில்லியன் யூரோக்கள் தருவதாக கூறியிருந்தது.

இதனிடையே, கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி ஒரு வருட காலப்பகுதியில் தயாராக இருக்கக்கூடும் என ஐரோப்பிய மருந்துகள் முகவரகம் (European Medicines Agency) நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...