Main Menu

கொரோனா தொற்று – அதிக அவதானம் நிறைந்த 3 மாவட்டங்கள் அறிவிப்பு!

COVID-19 வைரஸ் பரவுவதற்கான அதிக அவதானம் நிறைந்த மாவட்டங்களாக கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதன்படி, குறித்த மாவட்டங்களுக்கு மீள் அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

குறித்த மாவட்டங்களுக்கு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று (24) காலை தளர்த்திக்கொள்ளப்பட்ட நிலையில் பொருட்களை வாங்குவதற்காக விற்பனை நிலையங்களுக்கு பாரிய அளவில் பொதுமக்கள் திரண்டிருந்தமை வைரஸை கட்டுப்படுத்தும் செயற்பாட்டுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் காரணமாக அத்தியாவசிய நுகர்வு பொருட்களை வீடுகளுக்கே கொண்டுசென்று விற்பனை செய்வதற்கு மொத்த வியாபாரிகளுக்கு அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது.

சதொச, கீல்ஸ், லாஃப்ஸ், ஆர்பிகோ, ஃபுட் சிட்டி, அரலிய, நிபுன மற்றும் பிற மொத்த நிறுவனங்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களை வீடுகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தை முறையாக மேற்கொள்வதற்காக பசில் ராஜபக்சவின் தலைமையில் செயற்பாட்டு படையணி ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

அமைச்சகங்களின் செயலாளர்கள், அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகள் படையணியின் ஏனைய உறுப்பினர்களாவர்.

மேலும், அவதானம் நிறைந்த பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், மருந்துகள், எரிபொருள் மற்றும் ஏனைய சேவைகளை தடையின்றி மற்றும் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு பெற்றுக்கொள்ளும் திட்டம் நாளை முதல் செயல்படுத்தப்பட உள்ளது.

லொறி, வேன், முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் பொருட்களை விநியோகிப்பதற்காக பயன்படுத்தப்பட உள்ளன.

குறித்த விநியோக வாகனங்களுக்கு ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் வீதியில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பகிரவும்...