Main Menu

காலி முகத்திடலில் இதுவரை மக்கள் கண்டிராத ஐ.தே.கவின் பாரிய பேரணி : சுஜீவ சேனசிங்க

இலங்கையில் இதுவரைக் காலமும் காணாத பாரிய மக்கள் பேரணி 10 ஆம் திகதி வியாழக்கிழமை காலி முகத்திடலில் இடம்பெறவுள்ளது.

சுமார் 3 இலட்சம் மக்களை உள்ளடக்கிய இந்த பேரணி ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் ஆதரவளர்களின் நம்பிக்கையையும் அவரது வெற்றியை உறுதி செய்யும் பேரணியாகவும் அமையும் என்று விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார். 

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் மேலும் தெரிவித்தாவது : 

எதிர்வரும் 10 ஆம் கொழும்பு – காலி முகத்திடலில் பாரிய மக்கள் பேரணி இடம்பெறவுள்ளது. காலி முகத்திடலில் அதிகபட்சம் ஒன்றரை இலட்சம் மக்கள் மாத்திரமே ஒன்றிணைய முடியும். எனினும் எமது பேரணியில் சுமார் 3 இலட்சம் மக்கள் பங்குபற்றவுள்ளனர். எனவே காலி முகத்திடலுடன் அந்த பகுதியிலுள்ள பிரதான வீதியையும் பயன்படுத்த எதிர்பார்த்துள்ளோம். இது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்துக்கு அறிவித்துள்ளோம். 

பிற்பகல் 2 மணியளவில் கூட்டம் ஆரம்பமாகவுள்ளதால் நண்பகல் 12 மணி முதல் காலி முகத்திடலை அண்மித்த வீதிகள் முடப்படலாம். இதனால் அங்கு கடும் வாகன நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என்பதால் மக்கள் தமது போக்குவரத்துக்களை ஒழுங்கு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். இது தொடர்பில் பொலிஸ் தலைமையத்தினால் விஷேட அறிவித்தல் விடுக்கப்படும். 

சஜித் மீதான மக்களின் நம்பிக்கையையும், அவரது வெற்றியையும் உறுதி செய்யும் இந்த பேரணியால் கொழும்பிலுள்ள மக்கள் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்பதால் எமது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பகிரவும்...